Tuesday, December 29, 2015

மக்கள் நலப் பணியில் கவிதை உறவு

மக்கள் நலப் பணியில் 
'கவிதை உறவு'

29/12/2015 அன்றுகவிதைஉறவு’ சார்பாக சென்னை டாக்டர் இராதாகிருட்டிணன் நகர் மக்கள், அறந்தாங்கி வட்டம் மேற்பனைக்காடுகிராம மக்களளாகியோரின் ஒத்துழைப்போடும் நெல்லை ராஜதீபன் ஜூவல்லரி, டாக்டர் அமுதா பாலகிருஷ்ணன், ‘கவிதைஉறவு’ குமரி மாவட்டக்கிளை,தொழிலதிபர் கந்தசாமிஆச்சாரி, .பதி ஆகியோரின் உதவிகளோடும் வெள்ள துயர்தணிப்புப்பொருட்கள் வழங்கப்பட்டன.தேசியமணி இல கணேசன், இந்திய ரிசர்வ் வங்கியின் மண்டல இயக்குனர் டாக்டர் சதக்கத்துல்லா ஆகியோர் துயர்தணிப்புப்பொருட்களை வழங்கினர்.

எழுத்தால் மட்டுமின்றிச் செயலாலும் மக்கள் நலன் மேம்படப் பணியாற்றும் கவிதை உறவு ஆசிரியர் கவிஞர் ஏர்வாடி இராதாகிருட்டிணன் அவர்களைப் பாராட்டுகிறோம்.அவருக்குத் துணைநின்ற  எழுத்தாளர் அமுதா பாலகிருட்டிணன் அவர்களையும் ஏனைய நண்பர்களையும் மனமாரப் பாராட்டுகிறோம்.




Tuesday, December 15, 2015

மருத்துவ மாமணி கண்ணப்பன் விழா



டாக்டர் ஜே.ஜி.கண்ணப்பன் அவர்களின் 81ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா, 5ஆம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வு 2015 டிசம்பர் 13ஆம் தேதி இந்திய அதிகாரிகள் சங்க நூற்றாண்டுவிழா அரங்கத்தில் மிகச் சிறப்பாக நடந்தேறியது. முதலில் செல்வி பிரத்திக்ஷா குழுவினர் ‘’குருவின் மகிமை’’ என்ற தலைப்பில் அருமையானதொரு கதை இசைப் பொழிவொன்றை நிகழ்த்தி அனைவரையும் பிரம்மிக்க வைத்தனர்.
     முனைவர் கற்பகம் இறைவணக்கம் பாட டாக்டர் திருச்செல்வம் அவர்கள் அனைவரையும் இனிது வரவேற்றார். டாக்டர் கண்ணப்பன் அவர்களின் அண்ணன் டாக்டர் சண்முகநாதன் அவர்கள் நல்லதொரு தலைமையுரை நிகழ்த்தினார்.  சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் தாண்டவன் அவர்கள் முனைவர் வாசுகி கண்ணப்பன் அவர்களின் முனைவர்பட்ட ஆய்வு நூலான ‘’மானுட மாண்பு போற்றும் கவிஞர் குலோத்துங்கன்’’ என்ற நூலை வெளியிட தேசியமணி இல.கணேசன் அவர்கள் பெற்று  அருமையானதொரு சிறப்புரை ஆற்றி டாக்டர் கண்ணப்பன், முனைவர் திருமதி வாசுகிகண்ணப்பன் என்ற இனிய இணையரைப்பற்றி  பெருமைபட பேசினார்.
     தேசியமணி இல கணேசன் அவர்கள் டாக்டர் கண்ணப்பன்-வாசுகி அறக்கட்டளையின் 22ஆம் ஆண்டு விருதுகளை வழங்கிச் சிறப்புச் செய்தார். முனைவர் மறைமலை இலக்குவனார் அவர்களுக்கு ‘’அறிவியல் தமிழ் ஆதவன்’’ என்றும், குறள்ஞானி மோகனராசு அவர்களுக்கு ‘’திருக்குறள் செவ்வேள்’’ என்றும், டாக்டர் நாகேஷ் அவர்களுக்கு ‘’சிறந்த தடய அறிவியல் அறிஞர்’’ என்றும், வழக்கறிஞர் பாலசீனிவாசன் அவர்களுக்கு ‘’இளையோரைச் செதுக்கும் சிற்பி’’ என்ற விருதகளை வழங்கி, விருதாளர்களையும் டாக்டர் கண்ணப்பன் அவரகளின் குடும்பத்தையும் பெருமைபட வாழ்த்தினார்.           

     அடுத்து, இசைக்கவி இரமணன் அவர்கள் ‘’விதியும், மதியும்’’ என்ற தலைப்பில் அருமையானதொரு டாக்டர் கண்ணப்பன்-வாசுகி அறக்கட்டைளைச் சொற்பொழிவை ஆற்றி அனைவரையும் அசத்தினார். சென்னைப் பல்கலைக் கழக வருகைப் பேராசிரியர் முனைவர் மு.சிவச்சந்திரன் அவர்கள் நூலினைத் திறனாய்வு செய்து மகிழ்வித்தார். விருதுகள் வாங்கினவர்களின் சார்பில் முனைவர் மறைமலை இலக்குவனார் அவர்கள் ஏற்புரை வழங்கி நன்றி தெரிவித்தார். நிறைவாக முனைவர் வாசுகி கண்ணப்பன் அவர்கள் நிறைவுரையுடன், நன்றியுரை கூற தமிழ்ப்பண்ணுடன் நிகழ்வு இனிதே நிறைவுற்றது.   
          
      மருத்துவர்   திருச்செல்வம் அவர்களின் வரவேற்புரைக்காட்சி




முனைவர் வாசுகி கண்ணப்பன் அவர்களின் ஆய்வுநூல் வெளியீடு

                 
                  குறள்ஞானி மோகனராசர் விருது பெறும் காட்சி
                                         

பெங்களூர்ப் பல்மருத்துவ மேதை நாகேசு விருது பெறும் காட்சி

மறைமலை இலக்குவனார் விருது பெறும் காட்சி



வழக்கறிஞர் பால.சீனிவாசன் விருது பெறுகிறார்


முனைவர் வாசுகி கண்ணப்பன் நன்றி நவிலும் காட்சி

Sunday, December 13, 2015

சொந்தக் கதை

எண்ணிப் பார்த்தால் எனக்கே நகைப்பாம்
அறுபது  அகலுது  வருவது எழுபது
எண்களில்  மட்டுமே இந்த மற்றம்
எனக்குள் எந்த மாற்றமும் இலையே!
பிறந்தேன் எனல்பிழை பெற்றனர் என்னை;\
இலக்குவர் மலர்க்கொடி இணையர் அன்பால்
உலகினில் தோன்றினேன் என்செயல் என்ன?
வந்தேன் வளர்ந்தேன் வண்டமிழ்ச் சூழலில்!
கல்வியால் பதவியும் பதவியால் செல்வமும்
மேலும் மேலும் மேன்மையும் தேடிய
அறிஞர் நிறைந்த அருந்தமிழ் நாட்டில்
கல்வியும் பதவியும் செல்வமும் கொண்டே
தமிழின் உரிமை மீட்கும் பணியில்
தளரா(து) உழைத்தவர் என்னருந் தந்தை
கற்ற கல்வி  பெற்ற பதவி
உற்ற செல்வம் உயர்ந்திடும் பொழுதில்
கொண்ட கொள்கை  மாறா உறுதியும்
வண்டமிழ் நலன் காத்திடும்  பொறுப்பும்
இலக்குவப் பெரியோர் துலக்கமாய்ச் செய்தார்
அலக்கண் உற்றார் கலக்கம் செற்றார்
காவினெம் கலனே சுருக்கினெம் கலப்பை
மேவினோம் எம்வழி என்னும் தறுகண்
சங்கப் புலவர் ஏற்றதைப் போன்றே
இலக்குவப் பெருந்தகை இயல்பாய்க் கொண்டார்!
ஒவ்வோர் ஆண்டும் ஒவ்வோர் பணியிடம்!
கெஞ்சிப் பணிவதும் அஞ்சிக் குனிவதும்
நரிகளின் இயல்பு;அரிமாப் புலவர்
இலக்குவர்க்(கு) அஞ்சுவர் தமிழின் பகைவர்
மறைமலை யடிகளின் தமிழியல் நோக்கும்
பெரியார் வகுத்த  திராவிடப் போக்கும்
தம்மிரு கண்களாய்ப் போற்றினார் இலக்குவர்.
அன்னவர் மைந்தனாய்  அவனியில் வந்தவன்
பின்னொரு மாற்றும் எண்ணிடுவானோ?
புகுமுக வகுப்புப் பயிலும் போதே
அறிவியல் தமிழை வளர்த்திடும் நோக்கம்
அரும்பியதென்பால்;அறிவியல்  பட்டம்\
விரும்பியே சேர்ந்தேன் பயிலும் பொழுதே
தென்மொழி குறள்நெறி செந்தமிழ்ச் செல்வியில்
அறிவியல் கட்டுரை ஆக்கி மகிழ்ந்தேன்;
பட்டம் பெற்று வெளியே வருமுன்
இந்தி எதிர்ப்பில் சிறைக்குச் சென்ற
தந்தை பணிக்குத் துணை நின்றிட
மெய்ப்புத் திருத்தவும் செய்தி தொகுக்கவும்
குறள்நெறி இதழின் பொறுப்பும் ஏற்றேன்;
ஏழு திஙகள்  அவர்வழி இயங்கினேன்;
இலக்குவர் நடத்திய இன்றமிழ்க் :குறள்நெறி”
நாளிதழ் விற்றது நான்காயிரமாம்
வாங்கி விற்கும் முகவர் கூறினர்
விற்ற பணத்தை விழுங்கிய செயலால்
முகவர் செய்த மோசடிச் செயலால்
பொருள்மிக இழந்தோம்;புறக்கணிப்புண்டோம்
முறையாய் அவரெலாம் பணமளித் திருந்தால்
குறள்நெறி நாளிதழ் இன்றைய வேளையில்
பொன்விழாக் கண்டு பொலிவடைந்திருக்கும்!
‘மே’யில் தொடங்கிய மேன்மை நாளிதழ்
திசம்பர்த் திங்களில் கசங்கிப் போனதே!
அன்றைய வேளையில் அல்லலும் துன்பமும்
கன்றிய உள்ளமும் வெம்பச் செய்ததே
எங்கள் உள்ளத்தை  எவரே அறிவார்
யாம்  உணர்ந்த  கசப்பின் கடுப்பை?
இலக்குவர் நாளிதழ் தொடங்கினார் என்றதும்
இதற்குப் போட்டியாய் அதுவா என்றே
ஒருசிலர் வினவினர் உட்பொருள் வைத்தே!
தமிழகம் முழுவதும் முன்பணம் கட்டி
முகவர் முன்வந்த செய்தி சிலரை
முகம்சுளிக்கச் செய்ததறியோம்!
தகுந்த வழிகளில்  இதழை முடக்க
மிகுந்த முயற்சி மேற்கொண்டமையே
முகவர் கொண்ட பகைப்போக்(கு) என்பதை
அறிந்து கொள்ள ஆண்டுகள் சென்றன!
சனவரி முதல் ஏப்பிரல் வரைக்கும்
நான்கு திங்கள் நல்ல வேளையாய்
மாண்புடன் கழிந்தன திடுமெனக் கிடைத்த
கல்லூரிப் பயிற்றாசிரியர் பதவியில்!
சிவகாசி நகர்க் கல்லூரி ஒன்று
உவப்புடன் வழங்கிய விடுமுறைப் பணியால்
பயிற்சி பெற்றேன் பணமும் பெற்றேன்!
‘அய்யா நாடார் சானகி அம்மாள்
கல்லூரி’ வாழ்வில் முதன்முதல் பதவியை
வழங்கிய நன்றி மறவேன் என்றும்

                                   (தொடரும்..?)

மருத்துவமாமணி கண்ணப்பன் அவர்களின் 81-ஆம் பிறந்தநாள் விழா+5-ஆம் நினைவுநாள்

மறைமலை இலக்குவனார்,திருக்குறள் மோகனராசு,பெங்களூர் மருத்துவர் நாகேசு,பால.சீனிவாசன் ஆகியோர் பாராட்டப்பட்டனர்.வாசுகி கண்ணப்பன் விழாவைச் சிறப்பாக நடத்தினார்.இசைப்பாவலர் இரமணன்,பா.ச.க.தலைவர் இல.கணேசன்,சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் இரா.தாண்டவன்,மு.சிவச்சந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்