Saturday, October 31, 2015

மயிலாடுதுறை அ.வ.அ.கல்லூரியில் ஐம்பெரும் விழா

ஏ.வி.சி. கல்லூரியில் ஐம்பெரும்விழா
    

ஸ்ரீலோசனி வரதராஜுலு அறக்கட்டளை வழி பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த 125ஆம் ஆண்டினைப் போற்றும் வகையில் .வி.சி. கல்லூரியும்(தன்.) அதன் தமிழாய்வுத்துறையும் இணைந்து நூலரங்கம்-கருத்தரங்கம்-பாவரங்கம்- நாட்டியவரங்கம்- நாடகவரங்கம் என்று ஐந்து அரங்குகளைக்கொண்டு ஐம்பெரும் விழா வெகு சிறப்பாக வேலாயுதம் அரங்கில் நடந்தது. இவ்விழாவில் பாவேந்தர் மகனார் தமிழ்மாமணி மன்னர்மன்னன், பாவேந்தர் பெயரனார் கோ.செல்வம், கோ.பாரதி, கலிபோர்னியாப் பல்கலைக்கழகப் பேராசிரியர் முனைவர். மறைமலை இலக்குவனார், தலைவர் என்.விஜயரங்கன், கல்லூரிச் செயலர்&பொருளர்(பொ.) கி.கார்த்திகேயன், முதல்வர் முனைவர்.சு.அசோகன், ஆட்சிமன்றக்குழு உறுப்பினர் முத்து.ராஜசேகரன், ஜி.மகேஷ், ஜி.வி.ராகவன் உள்ளிட்ட அறிஞர் பெருமக்கள் கலந்துகொண்டனர்.
தமிழ்த்தாய் வாழ்த்துடன் தமிழ்த்துறைப் பேராசிரியர் துரை.குணசேகரன் எழுதி திரை இசையமைப்பாளர் செளந்தர்யன் இசையுடன் பாடிய கல்லூரி வாழ்த்துடன் விழா இனிதே தொடங்கப்பட்டது. முனைவர்.இரா.கெளரி அவர்கள் வாழ்த்துச் செய்திகளை வாசித்தார். தமிழத்துறைத்தலைவர் துரை.குணசேகரன் எழுதிய இரண்டு நூல்கள் வெளியிடப்பட்டன. உலகம் போற்றும் சிலம்பு என்னும் நூலை பாவேந்தர் பாரதிதாசன் மகன் மன்னர்மன்னன் வெளியிட முதல்படியைக் கலிபோர்னியாப் பல்கலைக்கழக மேனாள் சிறப்பு வருகைப் பேராசிரியர் முனைவர் சி.இ. மறைமலை இலக்குவனார் பெற்றுக்கொண்டார். தமிழ்ச்சொற்பிறப்பியல் வளர்ச்சி வரலாறு என்னும் நூலை முனைவர் மறைமலை இலக்குவனார் வெளியிட கல்லூரியின் ஆட்சிக்குழுத் தலைவர் டாக்டர். என்.விஜயரங்கன் பெற்றுக்கொண்டார். நூலின் படிகளைப் பெற்றுக்கொண்டவர்களும் கல்லுரியின் ஆட்சிக்குழு உறுப்பினர்  ஜி.வி.ராகவன் அவர்களும் வாழ்த்துரை வழங்கினர்.
முன்னதாக துரை.குணசேகரன் அனைவரையும் வரவேற்றார். நன்றியுரையை பேராசிரியர் செல்வ.கனிமொழி வழங்கினார்.
       கருத்தரங்கத் தொடக்கவுரையாற்றிய பாவேந்தர் மகனார் மன்னர்மன்னன் நனியுண்டு நனியுண்டு காதல் என்ற அழகான பாரதிதாசனின் பாடலைப் பாடினார். தன் தந்தையாரின் வாழ்க்கையில் ஏற்பட்ட சுவரசியமான வெளிவராத நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார். அந்நேரத்தில் மயிலாடுதுறையைச் சேர்ந்த அஞ்சலகர் திருவாளர்.மதிவாணன் தம்குடும்பத்திற்கு செய்த பெரு உதவியையும் பாரதிதாசனார் பாடல்கள் பல்வேறு இடங்களுக்கு பரவ காரணமாக இருந்ததற்கும் நன்றி நவின்றார்.
      பாரதிதாசனார் பாடலை சிலர் வெள்ளைப்பாட்டு அதாவது இலக்கணம் அற்றப்பாட்டு என்று எதிர்ப்புக்குரல் வந்தபோது பாரதிதாசனார் அதற்கு எதிர்ப்பாட்டு பாடினார் என்றும், அவரது பாடல்கள் எல்லாம் வீரம் நிறைந்திருப்பதற்குக் காரணம், தன்னை எதிர்த்தவர்களுக்கு தக்க பதில் அளித்தல் ஆகும். பாவேந்தருக்கு உடற்பயிற்சியின் மீது மிகுந்த ஆர்வம் உண்டு; தானும் செய்வார் பிறரையும் செய்ய வைப்பார். பாவேந்தர் பயின்ற திருச்சி கலைக்கல்லூரியில் 40 மாணவர்களில் முதல் மாணவராகத் தேர்ந்தார். பதினேழரை வயதில் பட்டம் பெற்று ஆசிரியர் பணியும் பெற்றார். அப்பொழுது அவரது முதல் சம்பளம் ரூ.12.
1955ல் அரசியலில் தடம்பதித்தார். வெள்ளைப்பாட்டு என்று சொன்ன பண்டிதமணி கதிரேசச் செட்டியாருக்கு உரியபதில் அளித்தார். வாழ்நாள் முழுதும் எதிர்ப்புகள் மிகுந்திருந்தன. ஆனாலும் 76 நூல்கள் எழுதியுள்ளார். அவரது நிழலில் .ராசவேலு, பட்டுக்கோட்டையார், தமிழ்ஒளி, டி.ராஜேந்தர் போன்ற ஆயிரக்கணக்கானோர் இளைப்பாறினர்.
நூலை வெளியிட்டு சிறப்புரையாற்றிய மறைமலை இலக்குவனார் மயிலாடுதுறை மண்ணில் கால்பதிக்கும் போதெல்லாம் மாயுரம் வேத நாயகம் பிள்ளையின் நினைவுதான் வருகின்றது. அவர்தான் கோபாலகிருஷ்ன பாரதியாருக்கு ஊக்கம் தந்தவர்.
தான் உலக அளவில் இருக்கும் விமான நிலையங்களில் சந்திக்கும் சிறப்புப் பயணிகளில் ஒருவராக ஏ.வி.சி. கல்லூரி மாணவர் இருப்பது பெருமைக்குரியது. பாரதியாரின் உயிரை  மூன்று முறை காத்தவர் பாரதிதாசன்; பாரதிதாசன் பாரதிக்கு தாசன் மட்டுமல்ல நேசனும் ஆசானும் ஆவார்.
துரை.குணசேகரன் அவர்கள் தமிழ்ச்சொற்பிறப்பியல் வளர்ச்சி வரலாறு என்ற நூலினை என் இல்லத்தில் இருந்துதான் எழுதினார். அவர் ஒரு கடின உழைப்பாளி. வேர்ச்சொல்லுக்கும் அடிச்சொல்லுக்கும் உள்ள வேறுபாட்டை தனது நூலில் மிகஅழகாக குறிப்பிட்டுள்ளார். இன்று சொற்பிறப்பியல் கற்பனையாகிவிட்டது. ஆனால் இந்நூல் பொய்மைக் கருத்தை முறியடித்து சொற்பிறப்பியலை சான்றாதாரத்துடன் விளக்கும்  அற்புதமான நூல். மற்றொரு நூலான உலகம் போற்றும் சிலம்பு என்பது அனைவரும் கற்று போற்றக்கூடிய பெண்மைக்கு மதிப்பளிக்கும் நூல் என்றார்.