Sunday, April 24, 2016

ஔவைக்கு முத்துவிழா

                              ஔவைக்கு முத்துவிழா
24/4/2016 அன்று முனைவர் ஔவைநடராசன் வரகளின் 81-ஆம் பிறந்தநாள்.ஆம்.அன்று அவர் முத்துவிழாக் காண்கிறார்.எளிமையை விரும்பும் அவருக்கும் அவர்தம் துணைவியார் மருத்துவமாமணி தாராபாய் அவர்களுக்கும் பெரிய விழாக்களில் விருப்பமில்லை.எனவே அவருக்குப் புலவர்குழுவின் சார்பில் எங்கள் வாழ்த்துகளை அவருடைய இல்லத்துக்குச் சென்று தெரிவிக்கலாம் என முடிவு செய்தோம்.எங்கள் புலவர்குழுத்தலைவர் சிலம்பொலியார் ஆவார்.இந்தச் சுட்டெரிக்கும் வெயிலில் அவர் திருவான்மியூரிலிருந்து பயணம் மேற்கொள்ளவேண்டாம் என வலியுறுத்திக் கூறினோம். நேரில் வருவேன் என அவர் கூறினாலும் இந்த வெயிலில் அவர் தொலைபேசி  மூலம் வாழ்த்துத் தெரிவிப்பதே நலம் என நாங்கள் வேண்டிக்கொண்டதனை அவர் ஏற்றுக் கொண்டார்.
புலவர்குழுப் பொறுப்பாண்மைக்குழுத் தலைவர்  மருத்துவர் மணிமேகலை கண்ணன்,புலவர்குழுத் துணைத்தலைவர் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் அவர்கள் செயற்குழு உறுப்பினர் முனைவர் வாசுகி கண்ணப்பன் அவர்கள்,செயலாளராகிய நான்(மறைமலை( ஔவை அவர்களின் இல்லத்துக்குக் காலை பத்தரை மணிக்குச் சென்றோம்.எழுத்தாளர் கழகச் சார்பிலும் கவிதை உறவு சார்பிலும் கவிஞர் ஏர்வாடியார், மேலும் மேனாள் மேயர் சா.கணேசன் ,த.கு.திவாகரன் ஆகியோரும் ஔவைபால் கொண்ட அன்பால் வந்திருந்தனர்.
பெருங்கவிக்கோ ஔவை வாழ்விணையரை வாழ்த்தி  ஒரு வாழ்த்துப்பா  இயற்றி வழங்கினார்.
முனைவர் வாசுகி கண்ணப்பன் அவர்கள் ஒரு வாழ்த்துப்பாடலைப் பாடினார்
அதன்பின்னர் அனைவரும் தங்கள் வாழ்த்துக்களையும் அன்பையும் தெரிவித்து விடைபெற்றனர்.வந்திருந்த அனைவரையும் வரவேற்று ஔவை அவர்களின் புதல்வர் முனைவர் அருள்,அவரது துணைவியார் சாலைவாணி ஆகிய இருவரும் சிற்றுண்டி வழங்கினர்.நல்லறிஞரையும் அவரது துணைவியார் அவர்களையும் வாழ்த்திய மகிழ்வில் அனைவரும் விடைபெற்றனர்.

Monday, April 18, 2016

ச.முத்துக்குமரனார்


தமிழகப் புலவர் குழு நடத்திய சமச்சீர்க் கல்வித் தந்தை ச.முத்துக்குமரனார் நினைவேந்தல்
 பாரதிதாசன்  பல்கலைக்கழகத்தின்   முன்னைத்துணைவேந்தரும் சமச்சீர்க்கல்வித்  தந்தையுமாகிய              ச.முத்துக்குமரனார்
14/4/16 அன்று புகழுடல் எய்தினார். அவரின்    நினைவேந்தலை 17/4/16 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கமும் தமிழகப்புலவர்குழுவும் இணைந்து நடத்தின.
மேனாள்பள்ளிக்கல்விஅலுவலர்   தொண்ணூற்றுமூன்று கவை நிறைந்த திருமதி.காந்திமதி அவர்கள் இல்லத்தில் அவர்கள் முன்னிலையில் இந்த நினைவேந்தல் நடந்தது. அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கச் செயலாளர் த.சுந்தரராசன் அவர்கள் வரவேற்புரை வழங்கினார். 
                                              
முன்னதாக ச.முத்துக்குமரனார்   அவர்களின்  திருவுருவப் படத்தைப் பெருங்கவிக்கோ திறந்து மலர்மாலை அணிவித்தார்.



பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் அவர்கள்   சமச்சீர்க்கல்வித்  தந்தை  ச.முத்துக்குமரனார்   அவர்களின் நினைவைப் போற்றிப் புகழ்வணக்கம் செலுத்தும் வகையில் யையறுநிலைப் பாடல் வழங்கினார்.
தமிழகப் புலவர் குழுச் செயலாளர்  மறைமலை இலக்குவனார்,   இரங்கல் தீர்மானத்தைப் படித்தபின்னர் கூட்டத்தினர் மூன்று நிமிடம் அமைதியாக எழுந்துநின்றனர்.
தீர்மானம் பின்வருமாறு அமைந்தது.
இரங்கல் தீர்மானம்
தமிழகப் புலவர் குழு உறுப்பினரும் மேனாள் பாரதிதாசன் பல்கலைக்கழகத் துணைவேந்தரும் சமச்சீர்க்கல்வித் தந்தையுமாகிய அறிஞர் ச.முத்துக்குமரன் அவர்களின் மறைவு பெருந்துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. தமிழ்நாட்டுப் பொதுப்பணித்துறையில் பொறியாளராகப் பணியேற்று கிண்டி பொறியியல் கல்லூரிப் பேராசிரியர், தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் தனி அலுவலர் ,இந்திய அரசின் துணைக்கல்வி ஆய்வுரையறிஞர், அண்ணா பல்கலைக்கழகத்தின் பதிவாளர்,பாரதிதாசன் பல்கலைக்கழகத் துணைவேந்தர், தமிழ்நாட்டரசின் உயர்கல்விமன்றத்தின் உறுப்பினர்-செயலர், உயர்கல்விமன்றத் துணைத்தலைவர் எனப் பல்வேறு பொறுப்புகளையேற்றுத் திறமிக்க பணியாற்றிய அப் பெருந்தகை தமிழ்நாட்டரசின் அறிவியல் நகரத்தின் செயற்குழுத்தலைவராகப் பணியாற்றியும் தமிழக அரசின் சமச்சீர்க்கல்விக் குழுவின் தலைவராகப் பணியாற்றியும் புதிய வரலாறு படைத்தார்.அந்தப் பேரறிஞரின் மறைவு ஈடு செய்ய இயலா இழப்பாகும்..அவரை இழந்து வாடும் அவர் குடும்பத்தினர்க்கும் உற்றார் உறவினர்க்கும் நண்பர்களுக்கும் தமிழகப் புலவர்குழுவும் அண்ணாநகர்த்தமிழ்ச்சங்கமும் தமது மனமார்ந்த இரங்கலைத் தெரிவிக்கின்றன. அவர் கனவு கண்ட “அனைத்துப் பள்ளிகளிலும் “கட்டாயத் தாய்மொழிவழிக் கல்வி” நனவாக்குதற்கு உரிய செயல்திட்டங்களில் உடனே ஈடுபடுமாறு அரசியல் தலைவர்களைக் கேட்டுக் கொள்கின்றன.              இங்ஙனம்,
மறைமலைஇலக்குவனார் ,செயலாளர்,  தமிழகப் புலவர் குழு
த.சுந்தரராசுலு, செயலாளர், அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கம்
(பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் அவர்கள் வழங்கிய கையறுநிலைக் கவிதையை இங்கே இணைத்துள்ள காணொளி நறுக்கில் கேட்கலாம்.)