Sunday, July 26, 2015

மருத்துவமேதை கண்ணப்பரின் தமிழ்ப்பணி


கண்ணப்பனாரின் எழுத்துப்பணி
முனைவர் வாசுகி கண்ணப்பன்


(25 சூலை மாலை 6.30மணிக்கு இலக்கிய சிந்தனை என்ற அமைப்பில் சீனிவாச காந்தி நிலையத்தில்  கண்ணப்பனாரின் எழுத்துப் பணி என்ற தலைப்பில் ஆற்றிய உரை)


     பல் மருத்துவர் ஜே.ஜி.கண்ணப்பனார் ஒரு எழுத்தாளராக உருவாகவில்லை. அடிப்படையில் அவர் ஒரு பல் மருத்துவர். பல் மருத்துவத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி சமுதாயத்தில் விழிப்புணர்ச்சி ஏற்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் முதன் முதலில் ஒரு நூல் எழுதினார். அதன் பின் பத்திரிகைகளில், வார இதழ், மாத இதழ்களில் எழுதினார் என்பதுதான் உண்மை. நாளடைவில் பல படைப்புகள் பல துறைகளில் படைத்தார் என்பதும் உண்மை. அனைத்திற்கும் அடிப்படை அவரின் உழைப்பு. எனக்கு கிடைத்தது சில, அவர் படைத்ததோ பல.
     Dr.ஜே.ஜி.கண்ணப்பனாரின் எழுத்தாற்றல் திறனுக்கு இவருடைய பாரம்பரியமும் ஒரு காரணமாக இருக்கலாம். விவேகானந்தருக்கு சைவசித்தாந்தத்தைத் தெளிவுபடுத்திய முன்சீப் ஜே.எம். நல்லசாமிபிள்ளை அவர்கள் வழியைச் சேர்ந்தவர். ஜே  என்பது அவர்கள் குலமான ஜானவி குலத்தைக் குறிப்பிடுவதாகும். மேலும் இவர் ஜே.எம்.நல்லசாமி பிள்ளை அவர்கள் நூல்களை அச்சிடும்போது பிழை திருத்தம் பார்க்கும் அனுபவம் மாணவப் பருவத்தில் பெற்றவர். ஆகவே குலவிச்சை இயற்கையாகவும் துணை செய்திருக்கலாம்.
     இவரின் எழுத்தைப்பற்றி கூறும் முன்பு இவரைப் பற்றிக்கூறவேண்டும். தேசத்திற்காக இரண்டாம் உலகப்போரில் உயிரைத் துச்சமாக மதித்து போர்வீரர்களுக்கு மருத்துவ சேவை செய்த Capt. Dr. J.S.கங்காதரம் பிள்ளை அவர்களுக்கும் திருமதி செண்பகம் அம்மாள் அவர்களுக்கும் 4ஆவது மகனாகப் பிறந்தவர். உடன் பிறந்தவர்கள் 7பேராவார்கள். தந்தை போர் களத்திலிருந்தமையால் தாயின் அரவணைப்பில் மட்டுமே இளவயதில் வளர்ந்தவர். கோத்தகிரி பக்கத்திலுள்ள சோலூர்மட்டம், கெய்த்தி போன்ற கிராமங்களில் படித்தவர். தந்தை பணிமுடிந்து திரும்பியபின் சொந்த ஊரான திருச்சியில் கல்வி தொடர்ந்தது. கல்வியில் முன்னனியில் நின்றவர். தந்தையைப்போல் இராணுவப்பணியில் ஈடுபாடு கொண்டமையால் பள்ளிப் பருவத்திலேயே N.C.C.இல் சேர்ந்து பயிற்சி பெற்றவர். சென்னையில் பல் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த பின்னும் அதனில் பயிற்சி தொடர்ந்தது. அதன் மூலம் அவர் கனவான Capt தகுதியைத் தந்தையைப்போல்  பெற்றவர். AIR WING பயிற்சியும் பெற்று விமானியாகும் தகுதியையும் பெற்றவர். அதே சமயத்தில் தட்டச்சு, சுருக்கெழுத்து என்று தன்னைப் பலவற்றிலும் உயர்த்திக்கொண்டவர். நடமாடும் பல்ஊர்தியில் தமிழ்நாட்டின் அனைத்து கிராமங்களுக்கும் சென்று மக்களுக்குப் பல் மருத்துவச் சேவை செய்த பெருமை கொண்டவர். அவருக்குப்பின் அதனில் பணிபுரிந்தவர்கள் இலர். சென்னை அரசாங்கப் பல் மருத்துவராகப் பணிபுரிந்து படிப்படியாக பதவி உயர்வு பெற்று முதல்வராகி ஓய்வு பெற்றவர். M.G.R. மருத்துவப் பல்கலைக்கழகத்தில் மதிப்பியல் பேராசிரியராக விளங்கி இறுதிவரை பணியாற்றியவர்.     சமுதாயத்தின்பேரில் அதிக ஈடுபாடு கொண்டவர். மருத்துவ முகாமின் முன்னோடியாக விளங்கியவர்.
     எழுத்தாளர் என்ற நிலையில் இவர் முதன் முதலில் 1972இல் பல்மருத்துவ நூலைத் தமிழில் வடித்தவர். வாய், பல் மருத்துவம் என்ற இந்நூல் இவரின் முதல் படைப்பு என்பதுடன் அது தமிழக அரசின் பரிசும் பெற்றது என்பதுதான் பெருமைக்குறியதாகும். மாணவர்களுக்கும் அதனில் ஈடுபாடு ஏற்படுத்தும் வகையில் தன் 3 மாணவர்களை இணைத்துக்கொண்டு செயல்பட்டார் என்பதுதான் மிகவும் போற்றுதற்குரியதாகும். 
     முதல் நூலான இந்த வாய், பல் மருத்துவம் என்ற நூலை அச்சிட்டு வெளியிட்டது சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம். அக்கழகத்தின் ஆடசியாளர் தாமரை திரு.சுப்பையா பிள்ளை அவர்கள் வரவேற்புரையில் எத்தனை புத்தகங்கள் வெளியிட்டபோதும் மருத்துவ நூல் வெளிவருவதுதான் பெரு மகிழ்ச்சி அளிக்கின்றது என்றார். தலைமை தாங்கிய மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் நடராசன் அவர்களும், பாராட்டுரை நல்கிய திரு. தில்லைநாயகம் அவர்களும், டாக்டர் இலலிதா காமேஸ்வரன் அவர்களும் தமிழில் முதன் முதலில் எழுதப்பட்ட நூல் என வியந்து போற்றினார்கள். சிறப்புரை ஆற்றிய அன்றைய நலத்துறை அமைச்சர் மாண்புமிகு அன்பழகன் அவர்கள் முதன் முதல் எழுதப்பட்ட இந்நூல் பல நூல்கள் எழுதுவதற்கு முன்னோடியாகத் திகழும்.  இதனைத் தழுவி பல நூல்கள் எழுத வழி வகுக்கும் என்று மிகவும் பாராட்டினார்,
     அடுத்து வளரும் மழலைகளுக்கு வளமான பற்கள் என்று அமுதசுரபியில் கட்டுரை படைத்தார். அதில் அனைவரும் வியந்து பாராட்டியது கருவுற்ற தாய்மார்கள் எந்த அளவு அக்கறை கொள்ளவேண்டும் என்பதாகும் அதாவது குழந்தை உண்டான 6லிருந்து 10ஆவது வாரத்திலேயே உருவம் உண்டாகிவிடுகிறது, அப்பொழுதே பற்களின் உருவம் ஏற்பட்டு கால்சியம் படிய ஆரம்பித்துவிடுகிறது. அந்த நேரத்தில் நல்ல சத்தான உணவு உட்கொள்ளவேண்டும் என்பது முக்கியம். அதைவிட முக்கியம் மன வருத்தமோ, நெகிழ்ச்சியோ, அடியோ அல்லது நோயோ வந்தால் அதனால் குழந்தைகளின் முகம் பாதிக்கப்படலாம், குறுகிய அண்ணம், பிளவு அண்ணம், பற்களில் குறைபாடுகள் ஏற்படலாம் என்பதுடன் நல்ல சுகாதாரம் மிக மிக முக்கியம் என்று வலியுறுத்துகிறார். மேலும் அடிக்கடி இருமல் மருந்து சாப்பிட நீக்க முடியாத வெண்ணிறப் படலம் ஏற்படலாம், தாய்ப்பாலால் கிடைக்கக்கூடிய பல்வேறு நன்மைகள், புளோரைடு உப்பின் பலன் என்பதுபோன்ற மிக முக்கியக் கருத்துகளைப் பதிவு செய்துள்ளார். பால் பற்கள் நல்ல முறையில் அமையும்போதுதான் நிரந்திரப் பற்கள் ஆரோக்கியமாக உருவாகும் என்பதை வலியுறுத்தியுள்ளார். இக்கட்டுரை பலரின் அறியாமையைக் களைந்தது என்பதைப் பல கடிதங்கள் மூலம் அறிய முடிந்தது.
     இத்தகைய அறிவைப்பெறக்கூடிய பல்மருத்துவக் கல்வியைப்பற்றி பல் மருத்துவக் கல்லூரியின் வெள்ளி விழாவின்போது செந்தமிழ்ச் செல்வியில் ஒரு கட்டுரை படைத்தபோது பல் மருத்தவக் கல்வி மருத்துவக் கல்வியில் இடம் கிடைக்காத நிலையில் இக்கல்வியைத் தேர்ந்தெடுக்கின்றார்கள் என்ற தவறான எண்ணம் களையப்பட்டது.   
     இலங்கையில் நடந்த பல் சிகிச்சை மாநாட்டில் படைத்த கட்டுரை தினகரனில் வெளிவந்து மிக்க வரவேற்பைப்பெற்றது, அதேபோல் அமுதசுரபி 1989 தீபாவளி மலரில் 6ஆம் திருமுறையில்வரும் திருத்தாண்டகத்தில் அப்பர் அருளிய ‘’பிணியறியோம் இன்பமே எந்நாளும் துன்பமில்லை’’ என்ற வாக்கியத்தைத் தலைப்பாகக்கொண்டு எழுதிய கட்டுரையும் எல்லோரையும் கவர்ந்து படிக்கத்தூண்டியது.
     திரு.தாமரை சுப்பையாபிள்ள அவர்களின் மணிவிழா மலரில் இன்றைய பல் மருத்துவ இயலில் இன்றைய அறிவியல்  பங்கு என்ற தலைப்பில் எழுதப்பட்ட அறிவியல் கட்டுரை பலருக்கும் நமது நாட்டின் அறிவியல் முன்னேற்றத்தை வெளிச்சமிட்டுக் காட்டியது என்பதுடன்  வள்ளவரின் ‘’எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
                மெய்ப்பொருள் காண்பது அறிவு’’ என்றவகையில் எதையும் ஆராய்ந்து அறிவியல் உண்மையைப் புரிந்து பயன்பெறவேண்டும் என்பதைப் பதிவு செய்தது.
     புன்னகை என்பது பொன்னகையிலும் மிக மிகச் சிறந்தது. அப்புன்னகைக்கு அடிப்படைத்தேவை வெண்மையான, சீரான, அழகான பற்கள் என்ற கருத்தை வலியுறுத்தும்வகையில் பெருமைபெற்ற கலைமகள்இதழில் வாடிய வதனத்தில் வந்தது புன்னகை என்ற தலைப்பில் கி.வா.ஜ அவர்களின் முன்னுரையுடன் திரு இராஜப்பா அவர்களால் பேட்டி கண்டு எழுதப்பட்டதும் ஒரு மறக்கமுடியாத அனுபவம்.
     இதுபோல் தொழிலாளரும் பல் பாதுகாப்பும், தடய ஆய்வுக்குப் பற்களின் பங்கு, பல் மருத்துவத்தில் இன்றைய நிலை, பல் மருத்துவம் ஓர் உயர் தொழில் நுட்ப அறிவியல் என பல கட்டுரைகளை எழுதியுள்ளார். 
     வீரகேசரியில் பல்லு போனால் சொல்லுபோச்சு என்ற கட்டுரையும், மாலைச்சுடரில் அழகான பற்கள் வேண்டுமா என்ற தலைப்பிலும், மாலைக்கதிரில் பல் பாதுகாப்பது எப்படி என்றும் பல நாளிதழ்களில் பல்லின் முக்கியத்துவத்தை விரிவாக எடுத்துரைக்கும் வகையில் படைத்தார்.
     செய்யும் தொழிலே தெய்வம் என்ற வகையில் தன் தொழிலை எந்த அளவிற்கு சமுதாயத்திற்குப் பயன்படுத்தமுடியுமோ அந்த அளவு பயன்படுத்த பெரிதும் உழைத்தார். அதற்காகப் பத்திரிகை, இதழ்கள், வானொலி, தொலைக்காட்சி போன்ற ஊடகங்களில் தன்னால் இயன்ற அளவு மக்களிடையே விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தினார்.
     பல் மருத்துவம் மட்டுமல்லாமல் பொது மருத்துவத்தைப்பற்றியும் அதிகமாக எழுதியுள்ளார். மருத்துவத் துறையில் வினோத சாதனைகள், புற்றுநோயை விரட்டுவோம் என்பதுபோன்ற பல கட்டுரைகள் அமுதசுரபி தீபாவளி மலரில் மலர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மருத்துவ அறிவியல், மருத்துவக்கல்வி தமிழில் முடியும், விஞ்ஞான மருத்துவச் சொற்கள் தமிழில் உண்டா? தொழுநோய் தடுக்க்கூடியதே, அறிவியல் நூல்கள் பெருகவேண்டும், நோயும் வலியும், மேலை நாட்டில் மேதகு மருத்துவம், புற்றுநோயை விரட்டுவோம் என எண்ணற்ற கட்டுரைகளைப் படைத்துள்ளார்.
     இவர் இலக்கியத்திலும் ஆர்வம் கொண்டவர். குறிப்பாக இலக்கியங்கள் அனைத்தும் கற்பனையோ, மூடநம்பிக்கையோ அல்ல. அனைத்தும் அறிவியல் சார்ந்தவை என்பதை மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் என்ற ஆவல் கொண்டவர். அதன் அடிப்படையில் திருக்குறளின் எண்ணற்ற குறளுக்கு அறிவியல் விளக்கம் தந்தவர். உலகத்திருக்குறள் மையத்தில் திருக்குறள் மருத்துவ மாநாடு நடத்தியபோது தலைமை ஏற்று A.V.M.இராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் மிகச்சிறப்பாக நடத்தினார். அம்மாநாட்டு மலரில் திருவள்ளுவர் ஒரு மருத்துவர் என்ற தலைப்பில் மிக அருமையான கட்டுரையைப் படைத்தார்.  அதேபோல் திருவள்ளுவர் ஒரு சட்ட வல்லுநர் என்ற தலைப்பில் படைத்துள்ளார். திருக்குறளும் மருத்துவமும் என்ற கட்டுரையை மலேயா மாநாட்டில் படைக்கும்போது மருந்து என்ற அதிகாரத்தில் வரும் இறுதிக்குறள்
     ‘’உற்றவன் தீர்ப்பான் மருந்துஉழைச் செல்வான்         
     அப்பால்நாற் கூற்றே மருந்து’’ 950
என்ற குறளில் நோயுற்றவன், நோய் தீர்ப்பவன், மூன்றாவது நோய் தீர்க்கும் மருந்து, மருத்தவ முறைகள் நான்காவது உழைச் செல்வான் என்பதற்கு ஒரு அற்புத விளக்கத்தை அம்மாநாட்டில் தந்து வியக்கவைத்தார். அதாவது மருத்துவன், மருந்து, மட்டும் இருந்துவிட்டால் போதாது அதனை ஏற்றுக்கொள்ளக்கூடிய சக்தியும், இயற்கையாக உடலிலே உடன் பிறந்த நோய் அகற்றும் சக்தியும் (immunological Defence Machanism) அவசியம் தேவை என்று கூறினார். அவையில் அமர்ந்திருந்த சிலம்பொலியார் எழுந்து மேடைக்கு வந்து அறிவியலாளர் கண்ணோட்டத்தில் புதிய உண்மை அறிய முடிந்தது எனப்பாராட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது. உறுதுயர் தீர்க்கும் மருந்து என்ற ஒரு குறளுக்கும் ஒரு அருமையான கட்டுரையை படைத்திருந்தார். .
     அதைப்போல் உலக இந்து மாநாட்டில் படைத்த இந்து சமயம் பற்றிய கண்ணோட்டம், வையம் வாழவும் தமிழ், வையம் ஆளவும் தமிழ் என்றும், தமிழர் சமயம்-ஓர் அறிவியல் நோக்கு, மொரீஷியஸ் தீவில் தமிழ் மணம், ஆன்மிகமும் மருத்துவ அறிவியலும் என்றும், முருகன் மாநாட்டில் பழனி மலையைச் சாரேனோ என்றும், வீரபத்திரர் மாநாட்டில் அவரின் அறிவியல் கருத்துகளைப் பதிவு செய்துள்ளார். அன்பே சிவம் என்ற கட்டுரையிலும் வாழ்வியல் கோட்பாட்டைத்தான் தெளிவு படுத்துகின்றார். என்பதுபோன்ற கட்டுரைகள் பல படைத்துள்ளார். அதனில் சிலப்பதிகாரம்- ஓர் தடய ஆய்வியல் காப்பியம் என இன்றைய நவீன அறிவியலான தடய ஆய்வியல் சிலப்பதிகாரத்தில் அன்றே இருந்தது என எடுத்தியம்பியுள்ளார். அதனை அனைத்து நீதியரசர்களுமே பாராட்டியுள்ளனர்.
     தமிழ் வளர்ச்சிக் கழகத்தில் தலைவராக பத்மபூஷண் வா.செ. குழந்தைசாமி அவர்கள் தலைவராகவும் இவர் துணைத்தலைவராகவும் விளங்கினர். அனைத்து அறிவியல் நூல்களையும் தமிழில் கொண்டவர எண்ணினர். பல் மருத்துவம் பற்றிய அறிய படைப்பை டாக்டர் கண்ணப்பன் அவர்களே படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
     இவற்றிற்கெல்லாம் மேலாக பேரா.திருமதி விஜயலட்சுமி அவர்களும் நானும் இணைந்து நடத்தும் கதை இசைப்பொழிவுகளில் அந்தந்த நிகழ்வின் கதாநாயகன் வேடத்தில் தோன்றி அனைவரையும் பிரம்மிக்க வைப்பார். இப்படி அவர் எடுத்த வேடங்கள் திருவள்ளுவர், வள்ளலார், பாரதியார், சோமசுந்திர பாரதியார், அகத்தியர், அந்தணர், பெரியார் என பல்வேறு உருவம் தாங்கி பெருமை சேர்த்தவர்.

     இவ்வாறு பல் துறை வித்தகராக இருந்தபோதும் பார்வைக்கு எளியராகவும், எளியர்க்கு இரங்குபவராகவும், பழகுதற்கு இனியவராகவும், பண்பினுக்கு எடுத்துகாட்டாகவும், மொத்தத்தில் சமுதாயத்திற்கு நற்பாதை காட்டுவதில் கலங்கரை விளக்கமாக என்றென்றும் திகழ்வார் என்பது உண்மை.   

No comments:

Post a Comment