Friday, June 26, 2015

ஒய்.எம்.சி.ஏ.பட்டிமன்றம் நடத்திய கலைச்சுடர் பி.யு.சின்னப்பா நூற்றாண்டுவிழா


ஒய்.எம்.சி.ஏ.பட்டிமன்றம் நடத்திய  கலைச்சுடர் பி.யு.சின்னப்பா நூற்றாண்டுவிழா

எழுபதாண்டுகளாகச் சென்னையில் தமிழ்ப்பணியாற்றி வரும் சென்னை ஒய்.எம்.சி.ஏ.எசுபளனேடு கிளையுடன் இனைந்த சென்னை ஒய்.எம்.சி,ஏ, பட்டிமன்றம்  செவ்வாய்க்கிழமைதோறும் சென்னை ஒய்.எம்.சி,ஏ கட்டடத்தில் முதல் மாடியில் அமைந்த மக்கானோகி அரங்கில் கூடித் தமிழ்விழாக்களை,கருத்தரங்குகளை,சிறப்புச் சொற்பொழிவுகளை நிகழ்த்திவருகிறது.மே திங்கள் மட்டும் கோடையை முன்னிட்டு அங்குக் கூட்டங்கள் நடத்துவதில்லை.
இயல்,இசை,நாடகம் என்னும் முத்தமிழிலும் அரும்பணியாற்றிய சான்றோர்களுக்கு விழா எடுப்பதிலும்  சென்னை ஒய்.எம்.சி,ஏபட்டிமன்றமே முன்னோடியாய் விளங்கிவருகிறது.அவ்வகையில் கலைச்சுடர் பி.யு.சின்னப்பா அவர்களின் நூற்றாண்ட விழாவைக் கடந்த 9/6/15  சிறப்பாக நடத்தியது.இனிக் கவிஞர் திருமதி பானுமதி அவர்கள் வழங்கிய இக் கூட்டம் குறித்த அறிக்கையைக் காண்போம்
புதுகை எனும் புதுக்கோட்டையின் கலைச் செல்வர் திரு சின்னப்பா அவர்களின் 100-வது, பிறந்த நாள் விழா சென்னையில்,பாரி முனை  கிருத்துவ இளைஞர் மன்றத்தில் 09-06-15 அன்று திரு.சொல்லருவி முத்து சீனிவாசன் தலைமையில், மன்ற பட்டிமன்ற செயலளார் திரு..பக்தவத்சலம், இலக்கிய ஆர்வலர் திரு. பி.வெங்கட்ராமன்,புதுகைத் தென்றல் ஆசிரியர் திரு. தர்மராஜன்,மற்றும்திரு.இராஜேந்திரன் ஆகியோரின் சிறப்பான உரைகளுடன் இனிதாக நடை பெற்றது.அந்தத் தருணத்தில் சிறப்பு மடல் திரு பி. வெங்கட்ராமன்(பி வி) அவர்களால் வெளியிடப்பட்டது.எதிரொலி விஸ்வனாதன்,வி சண்முகம்,மா தாமோதரக் கண்ணன்,குமரி அமுதன்,நீரை.அத்திப்பூ, ப்ருந்தாவனன், மற்றும் பி. வி அவர்களின் கவிதைகளும், கட்டுரைகளும் மடலுக்கு மகுடம் சேர்த்தன.. திரு. கன்னிக்கோயில் இராஜா அவர்களும் விழா மடலை நன்கு அமைதுத்தந்துள்ளார்.

மேடை மற்றும் திரைப்பட நடிகர் மற்றும் பாடகரான திரு. சின்னப்பாவிற்கு இப்படி ஒரு விழா எடுத்து சிறப்பிக்க முழு முயற்சி எடுத்த திரு. பி.வி அவர்களுக்கும்,அருமையாக அமைத்துத்தந்த மன்ற செயளாலர் அவர்களுக்கும் தமிழ் கூறும் நல்லுலகம் கடமைப் பட்டுள்ளது. விழாவில் பல அரிய செய்திகள் பகிரப்பட்டன. 
வாழ்வை கலையாக்கி வளர் கலையெய் வாழ்வாக்கி ,மா மனிதர்களை உருவாக்கிய பெருமை மிகுந்த புதுக்கோட்டை, கலை உலகிற்கு வழங்கிய பல நல் இரத்தினங்கள் என்றுமே வரலாறு ! அவற்றுள் வண்ணங்களை வாரியிறைக்கும்   வைரம் எனத் திகழ்பவர் திரு. பி. . சின்னப்பா அவர்கள்.மிகக் குறைந்தவருடங்கள் தான் வாழ்ந்தார்; பாடுவதிலும். நடிப்பிலும் மிகநிறைவான சாதனைகள் செய்தார்

நா.டக நடிகரான திரு. உலகனாதன் பிள்ளைக்கும், திருமதி. மீனாக்ஷி அம்மாளுக்கும் 05-05-1916இல் மூத்த பிள்ளையாகப் பிறந்தார். இரு தங்கைகள் இவருக்குபாடுவதும், நடிப்பதும் கருவிலே திருஉடைய இவருக்கு நீரில் மீன் குஞ்சினைப் போல் இயல்பானது. நல்ல குரல் வளமும்,பாவமும் இவருக்கென்று ரசிகப் பட்டாளத்தையே ,பஜனைப்  பாடல்கள் முதல் நாடகப் பாடல்கள் வரை உருவாக்கித் தந்தன. மீன லோசனி தத்துவ பால சபாவில் நடிக்கத்  துவங்கிய இவர்மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியில் இணைந்தார். பாட்டுத் திறத்தாலே சிறு வேடங்களிலிருந்து முக்கிய நடிகரானார். எம். ஜி. சக்ரபாணி, எம். கே. இராதா,பி. ஜி. வெங்கடேசன், எம் ஆர். ஜானகி, எம்.ஜி. ஆர்ஆகியோருடன் இணைந்து நடித்துள்ளார்;இலங்கை, ரங்கூன் முதலிய இடங்களுக்கும் சென்று சிறப்பாக செயலாற்றிஉள்ளார்.

பின்னர் பாய்ஸ் கம்பெனியிலிருந்து, தந்திரமாக வெளியேறி, சிறப்பு நாடகங்களில் நடித்துப் புகழ் பெற்றார்.வெள்ளித் திரையில் இவரது திருப்பு முனைசந்திர காந்தா 1936-இல் வெளியாகி அமோக வரவேற்பு பெற்றது.1940 இல் வெளிவந்த உத்தம புத்திரனில் இரு வேடம் தாங்கி இணையற்ற புகழ் அடைந்தார்.

பிருத்விராஜன் திரைப்படத்தில், தன் கதானாயகியாக நடித்த திருமதி . சகுந்தலாவை தன் இல் வாழ்க்கைத் துணையாகக் கொண்டார். ஒரே மகன்- திரு . ராஜா பஹதூர்.இவர் கோயில் புறா என்ற திரைப்படத்தில் கதானாயகனாக அறிமுகமானார்.பிறகு இவரைப் பற்றி குறிப்பிடத்தகுந்த தகவல்கள் இல்லை.

சில வெற்றிப் படங்கள், சில தோல்விப் படங்கள். எழுந்தும் விழுந்துமாக  பி.. சின்னப்பாவின் திரைஉலக வாழ்க்கை. இருபத்தாறு படங்கள் நாயகனாக நடித்துள்ளார்.முப்பது சொந்த வீடுகள் இவருக்கு இருந்தனவாம்! ஆனால், இவர் இறந்த பிறகு ஒன்றுமே இல்லை.

மனோன்மணி, “கண்ணகி அவரை நடிகர் மன்னனாக நிலை நிறுத்தின.

டி. ஆர். சுந்தரம் என்னும் அற்புத இயக்குனர் இவருக்கு மறு வாழ்வு தந்தார் ஜகதலப் ப்ரதாபன் என்ற  சினிமாவினால். அந்தக்  காலத்தில் ஒரு பாடல் காட்சியில் ஐந்து வேடமிட்டு (பாடகராக, வயலின் வாசிப்பவராக,மிருதங்கம் வாசிப்பவராக,கஞ்சிரா கலைஞராக, கொன்னக்கோல் வித்வானாக) இவர் பாடிய கல்யாணி ராகப் பாடலை(தாயைப் பணிவேன்) கேட்காதவர்கள் செவியிருந்தும் கேளாதவரே!......

அருமையான குழைவும், நளினமும்,தாவும் ஸ்வரப் பின்னலும், மாறும் தாள நடையும்,கஞ்சிராவில் ரவை தடவும் அழகும், பிசகாத கொன்னக்கோலும், அதைப் படமாக்கிய விதமும் திகட்டாத விருந்து.
திரு. சின்னப்பா .
மே 5-ம் தேதி,1916-ல் புதுகையில் பிறந்த சின்னப்பா நாலாவது வரை தான் படித்தார். தன் திறமைகளால் நாடறிந்த நடிகர் ஆனார்.பாடல், வசன உச்சரிப்பு,வாள், சுருள் கத்தி, குஸ்தி மல் யுத்தம் போன்றவற்றில் அற்புதமான திறன்  பெற்ற இவர் நடித்தது 26 படங்கள். இரண்டு முதல் 10 வரை பல வேடம் தாங்கி அசத்திய இவர் 8 படங்களுக்கு மேல் வெள்ளி விழா கண்டவர். 35 வயதில் இந்த உன்னதக் கலைஞன் மறைந்தார்.

பல திறமைகள் கொண்டவர் பி. . சின்னப்பா. நல்ல உடல் வாகு,கம்பீரமான குரல்,துள்ளும் இளமை, நிறைந்த ஞாபக சக்தி,உண்மையாகவே வாள் சண்டை ,சுருள் கத்தி சண்டை, மல் யுத்தம், மான் கொம்பு சண்டை, பளு தூக்குதல் என அவர் முரட்டுக் காளையாக இருந்தவர். அவர் ரசிகர்களும், எம். கே. தியாகராஜ பாகவதரின் ரசிகர்களும் அடிக்கடி மோதிக் கொள்வார்களாம்.



தொகுத்து வழங்கியவர்-திருமதி.பானுமதி நடராசன்
வலமிருந்து:புதுக்கோட்டை ப.வேங்கடராமன்,செயலர் கெ.பக்தவத்சலம்,புதுகை முத்து சீனிவாசன்,புதுகைத்தென்றல் தருமராசன்,,புதுகை இராசேந்திரன்

No comments:

Post a Comment