Sunday, July 26, 2015

சர்வ சமய சமரசம்

சர்வ சமயம்
முனைவர் வாசுகி கண்ணப்பன்

(திருநெல்வேலியில் 19 ஜூலை அன்று நடந்த சர்வ சமய மாநாட்டில் பேசிய பொழிவு)

 திருநெல்வே
லி மாவட்டத்தில் உள்ள சத்திய நகரத்தில் மனு ஜோதி ஆசிரமத்தில்46 ஆவது கல்வி விழா 2015 ஜூலை 15லிருந்து 22 வரை மிகச் சிறப்பாக நடந்தது.  19 ஆம் தேதி அன்று மாலை சர்வ சமய மாநாடு சென்னைத் தொலைக்காட்சி நிலைய உதவி இயக்குநர் முனைவர் பால.இரமணி அவர்களின் தலைமையில் மாண்புமிகு நீதியரசர் T.N.வள்ளிநாயகம், V.G.P.குழுமத்தின் தலைவர்  V.G. சந்தோஷம் அவர்களின் முன்னிலையில் நடந்தது. அதனில் சிறப்பு அழைப்பாளர்களாகப் பலரும்  பங்கேற்றனர்.  சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற முனைவர் வாசுகி கண்ணப்பன் ஆற்றிய  சிறப்பரை. 

     சமயம் என்பது சமைத்தல் என்று பொருள்படும். அதாவது எல்லா மதங்களும் கூறும், இறைப்பதம் அடைவதற்கு மனதைப் பக்குவப்படுத்தக்கூடிய தன்மையைத் தருகின்ற பாதை சமயம். பல பொருட்களைக்கொண்டு ஒரு ருசியான உணவைத் தயார் செய்யும் இடத்தை சமையலறை என்கிறோம். அனைவரும், அனைத்து சமயங்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய நெறிபடுத்தக்கூடிய பொதுவான நல்ல கருத்துக்களைக்கொண்டது  சர்வ சமயமாகின்றது.
       சமயம் என்றால் வழி, மார்க்கம் என்று சொல்லப்படுகிறது. மனிதர்கள் உயர் நிலை  அடைவதற்கான வழியைக் காட்டுவதே சமயம். இந்த சமயம் மனிதர்கள் வாழும் சூழ்நிலை, கால நிலை, சீதோஷ்ணநிலை, பழக்கம், வழக்கம், பண்பாட்டுக்கேற்ப பல வகைகளைக்கொண்டுதான் அமையும். மேலோட்டமாகப் பார்த்தோமேயானால் எல்லா சமயங்களும் வெவ்வேறு கருத்துகளைக் கொண்டிருப்பதுபோல் தோன்றினாலும் ஆழ்ந்து பார்த்தோமேயானால் அதன் அடிப்படைக் கொள்கைகள், மூலக் கருத்துகள் ஒன்றாக இருப்பதை உணரமுடியும். மிகக்குறிப்பாக கடவுளின் பெயர்களோ, உருவமோ, வழிபடும் முறைகளோ மாறுபாடாக இருந்தாலும் அவர்கள் கடைபிடிக்கின்ற நெறிமுறைகள் ஒன்றாகத்தான் இருக்கின்றன. விரதங்கள், பண்டிகைகள் என்பதுபோன்ற பல நிகழ்வுகள் எல்லாமதங்களிலும் இருப்பதைப் பார்க்கிறோம். மேலும் அனைவரிடத்தும் அன்பு காட்டுதல், அன்னதானம் செய்தல்,  எளியவர்களுக்கு உதவுதல், உயிர்களுக்கு இரங்குதல் போன்ற பலநற்செயல்களை அனைத்து மதங்களும்  வலியுறுத்துகின்றன.  பண்டிகைகள் கூட டிசம்பர் மாதத்தில் ஒன்றாய் இணைந்து வருவது இதனை வலுவூட்டுவதாகும் வைகுண்ட ஏகாதேசி, ஆருத்தரா தரிசனம், கிருஸ்துமஸ், மிலாடிநபி, மார்கழி நோன்பு என அனைத்தும் டிசம்பர் மாதத்தில் வருவதைப்பார்க்கலாம். இதிலிருந்து சமயங்களின் அடிப்படைக் கொள்கைகளில் பேதமேயில்லை. இறைவனின் பெயர்களில், மத குருமார்களில், அவர்கள்  செய்யும் முறைபாடுகளில், மொழிகளில்தான் வேறுபாடுகள் இருக்கின்றன. கடைப்பிடிக்கும்  வழிமுறைகள், அடிப்படைக் கொள்கைகள், குறிக்கோள்கள் எல்லாம், மனிதன் நல்ல முறையில் வாழ்ந்து இறுதியில் இறைவனடி சேரவேண்டும் என்பதேயாகும். ஆகவே சமயங்கள் அனைத்தும் கொண்டுள்ளது, சர்வ சமயக் கொள்கைகளைத்தான் என்பது புலனாகின்றது.
      உதாரணமாக இந்து மதம் சொல்கின்றது, ‘’அவனன்றி ஓர் அணுவும் அசையாது’’ என்று, இஸ்லாம் மதம் சொல்கின்றது ‘’லாஇலாஹா இல்லல்லாஹு முகமதுர் ரஸுல்லாஹி’’ என்று. அதாவது இல்லை, இல்லவேயில்லை, உலகத்திற்குரியவன் இறைவனைத்தவிர வேறு எதுவும் இல்லவே இல்லை என்கிறது. கிருத்துவத்தில் சங்கீதப் பகுதியில் Psalm says ‘’Unless the Lord build the house they labour in vain who built it’’. அதாவது கர்த்தர் வீட்டைக் கட்டாராயின் கட்டுகிறவன் பிரயாசம் விருதா என்கின்றது. கர்த்தரின் கருணை இல்லையாகில் எதுவும் இல்லை என்கின்றது. ஆக இறைவன் ஒருவரே, அவரை அடையும் வழியும் ஒன்றே என்ற கருத்தை அனைத்து சமயத்தவரும் ஏற்றுள்ளனர் என்பது உண்மை. அதைத்தான் திருமூலர் ‘’ஒன்றே குலம் ஒருவனே தேவன்’’ என்றார்.    
      G.U Pope அவர்கள் கிருத்துவ மதத்தைப் பரப்ப இந்தியா வந்தார். அதன் நிமித்தம் தமிழைப் படித்தார். திருவாசகத்தைப்படித்தபோது கண்ணீர் மல்க உருகினார் என்றால் சைவசமயத்தினால் அல்ல, அவர் சைவத்திற்கு மாறவில்லை. அதனில் கூறப்பட்ட அனைவருக்கும் பொதுவானது நெஞ்சைத் தொடுகின்ற சமய சார்பற்றக் மேன்மையான கருத்துகள்தான் அவரை உருகவைத்தது  என்பதுதான் உண்மை. இதிலிருந்தே சமயம் என்பதே சர்வ சமயம்தான் என்பதை உணர்ந்து தெளியலாம்.
     தாயுமானவர் தன் பாடலில் கூறுகின்றார் மாங்கொட்டையை ஊன்றி, செடியாக்கி, மரமாக்கி பின் பழம் கிடைத்தபின் மரத்தைக் கட்டிக்கொண்டிருப்பார்களா? அதுபோல் இறையடி அடைந்தபின் சமயம் என்ற ஒன்று தோன்ற வாய்ப்பேயில்லை என்கிறார்.
     திருமூலரும், ‘’ஒன்றள பேரூர் வழி அதற்கு ஆறுள
                   நன்றிது தீதிது என்றுரை மாந்தர்கள்
                   குன்று குரைத்தெழும் நாயை ஒத்தார்களே’’    என்கிறார். இறைவன் ஒருவன். அவனை அடையும் வழியில் இது தீது இது நன்று என்று கூறுவதைக் கடுமையாக பெரிதும் விமர்சிக்கின்றார். 
     திருவெண்காட்டு பட்டினத்தடிகளும் ‘’வாதமும் சமயபேதமும் கடந்த மனோலய இன்ப சாகரமே ஏதும் ஒன்றறியேன் யாதும் நின்  செயலே இறைவனே ஏக நாயகனே’’ என்கிறார். அதாவது வாதம் கடந்தவன், சமய பேதம் கடந்தவன், மனோலய இன்பக்கடலாக அனுபவம் அளிக்கக் கூடியவன், ஏதொன்றும் அறியேன் என்று சரணம் அடைந்தவர்களுக்குக் காக்கக்கூடிய, அருள்தரக்கூடிய, இன்பம் பயக்கக்கூடிய வீடுபேற்றை அருளக்கூடிய இறைவனாக இருக்கக்கூடிய ஒருவனே கடவுள் என்கிறார்.
     முழு முதற்கடவுள், உலக வழக்கிலாகிய ஒரு ஜாதிக்கே, ஒரு கூட்டத்திற்கே, ஒரு அண்டத்திற்கே ஒரு கண்டத்திற்கே ஒரு ஊருக்கே, ஒரு கிராமத்திற்கே, ஒரு தெருவிற்கே, ஒரு நிலையத்திற்கே, ஒரு சமயத்திற்கே உரியவனாயிருப்பவன் என்று துணியும் மந்த புத்தியும். மத வெறியும், பொருந்தாத கோட்பாடுகளில் அடங்காதவனாய் வஞ்சகர் செய்கைகளில், எழுத்துக்களில் சிலிர்ப்புக்கொண்டு ஒரு சிறிதும் நிற்பானல்லானாய் தன்னை இனிது அவாய் நிற்பார்க்கெல்லாம் முன்னாதல், பின்னாதல், இடையாதல் அனுகிரகத்தருளும் பரம்பொருளாய் உள்ளோன் இறைவனே என்பது அறியக்கூடிய ஒன்றாகும் என்று பாம்பன் சுவாமிகள் தகராலய ரகசியத்தில் விளக்கியுள்ளார். 
     எல்லா சமயத்தினரும் மனித வாழ்க்கையின் பயனைப் பெற, பொதுவான கொள்கையாக, அறம், பொருள் இன்பம். வீடு என்று வகுத்திருக்கிறார்கள். இதனை வடமொழியில் தர்மம், அர்த்தம், காமம், மோக்ஷம் என்பர். இந்த நான்கையும் அடைவதற்கான பாதை, வழி சமயம். சமயங்கள் சொல்லும் கருத்து, அறம் என்றால் அறவழியில் வாழவேண்டும், பொருள் என்கின்றபோது அறவழியில் பொருள் ஈட்டவேண்டும், இன்பம் என்பது அறவழியில் ஈட்டிய பொருள் கொண்டு இன்பமாக வாழவேண்டும். இறுதியில் வீடுபேறு அடைதல் வேண்டு  ம். இந்த நான்கையும் தரக்கூடியது எம்மதமாயினும் அம் மதம் நல் மதமே, அது சர்வ சமய மதமே. வீடுபேறு அடைந்தபிறகு மதமற்ற நிலை தானே வந்துவிடும்.
     அப்படியெனில் மாறுபட்ட மதங்கள் தேவையா எனக்கேட்டால் தேவைதான் என்பதுதான் பதிலாகும். எப்படி மிகப்பெரிய ஆலமரம் சிறு செடியாக இருக்கும்போது அதற்கு வேலி என்பது எப்படி அவசியம் தேவையோ அதுபோல் பக்குவப்படாத மனிதனுக்கு மதம் என்ற பாதுகாப்பு மிக மிக அவசியம்.  இக்கருத்தை ‘’போது மரமாமளவும் புல் வேலி வேண்டுதல்போல் ஆத்தன் அருள் காரும் மதமாமே பரஞ்சோதி’’ என்று பாம்பன் சுவாமிகள் பாடியுள்ளார்.
     அறம், பொருள், இன்பம் அடைந்தபின் அவன் எல்லாம் வல்ல இறைவனை உணர்ந்தபின் அவன் மதத்தை தாண்டிய உயர் நிலைக்கு வந்துவிடுகின்றான்.
     உலகில் எல்லா மதங்களும் கூறுவது அறம், பொருள், இன்பம், வீடு எனபதைக் கண்டோம். எளிமையாகச் சொல்லுங்கள் என ஔவையிடம் கேட்டபோது அவர் கூறினார் ஈதல் அறம். அதாவது பிறருக்குக் கொடுப்பது அறம். பொருள் என்பது தீவினை விட்டு பொருள் ஈட்டல் என்றார். காதல் இருவர் கருத்தொருமித்து ஆதரவு பட்டதே இன்பம் என்றார். இம்மூன்றுமே செயற்கரிய செயல்கள். இம்மூன்றையும் விட்டு இறைவனை அடைவதே வீட்டின்பம் என்றார்.
     இன்னும் சற்று ஆழ்ந்து சிந்தித்தால் மற்றவர்களோடு பண்போடு பழகுகின்ற வாழ்க்கை நெறியே அறமாகும். வாழ்வதற்கான பொருள் செல்வம் என்பதோடு பொருள்பட அதாவது வாழ்வதில் ஓர் அர்த்தம் இருக்கும்படி வாழ்தலாகும். இன்பம் என்பது மனதைச் சார்ந்தது. துன்பம் நீக்கி வாழ்தலாகும். வீடு என்பது அனைத்தையும் கடந்து இறைவனுடன் கலக்கும் நிலை என்பதாகும். அந்த நிலையில் எந்த ஒரு தாக்கமும், ஏக்கமும், எதிர்பார்ப்பும் இல்லாத ஏகாந்த நிலையாகும்.
     இந்த நிலையில்தான் அந்நாளில் ஞானிகள் பலர் வாழ்ந்திருந்தார்கள். இடைக்காலத்தில் இந்நிலையில் வாழ்ந்தவர்கள் வடலூர் இராமலிங்க சுவாமிகள், பேரூர் சாந்தலிங்கசுவாமிகள். வள்ளலார் சத்திய ஞான திருச்சபை நிறுவியவர். சமரச சுத்த சன்மார்க்கக் கொள்கையை நிலை நிறுத்தியவர். இவரும் சாதி பேதங்களை மறுத்தவர்.
     சாந்தலிங்கசுவாமிகள் வீர சைவ மரபினராயினும் அனைத்து மதங்களையும் சேர்த்து, இணைத்து, அணைத்து, அரவணைத்து, ஆதரவளித்து, போற்றியவர், அதிரோத உந்தியார் படைத்தார்.. (இது சரியா, யார் சொன்னது எதனில் வருகிறது)  அதிரோத என்றால் விரோதம் கொள்ளாதிருத்தல் என்பதல்ல விரோதத்தை எல்லாம் தாண்டி நிற்கின்ற நிறைந்த பக்குவ நிலையாகும்.
     இருவருமே ஒளிவரொடுக்கத்தை (இதுவும் சரியா) ஆராய்ந்தவர்கள். இவ்வுலகில் வாழும்போதே இவ்வுலக வாழ்க்கையை விட்டுவிட்டு இறைவனோடு தொடர்பு கொண்டு இவ்வுலகத்தை வென்றவர்கள். வள்ளலார் இவ்வுலக இருளகற்றி இறை ஒளியோடு கலந்திடும் வண்ணம் அருட்பெருஞ்சோதியை வணங்கியவர்.                                  
      இதற்கும் மேலான கருத்தை அறம், பொருள், இன்பம், வீட்டிற்குத் தருகிறார் திருப்போரூர் சிதம்பரம் சுவாமிகள்.
‘’ என்போதம் நின்பாலே ஈதலே நல்லறமாம்
உன்போதும் கைக்கொள்ளல் உன் பொருளாம் - உன் பாதத்து
ஆனந்தம் இன்பமாம் ஆராவமுதே போரூரா
மோனந்தான் வீடாகும் மொய்த்து’’ அதாவது நீ கொடுத்த அறிவை உன்னிடம் கொடுப்பது அறம். நாமோதிய கல்வியும், எம்மறிவும் உன்னிடமிருந்து ஈட்டிய பொருள் அதனை உன்னிடம் ஈந்து மகிழ்வது. ஆனந்தம் என்பது உன் பாதத்திலேயே கிடப்பது. மோனந்தான் வீடாகும் உய்த்து என்பது அமைதியாக சலனமற்று ஏகாந்தமாய் அமர்ந்திருத்தல் என்கின்றார். இந்நிலைக்கு எந்த சாதியும், சமயமும், மதமும் குறுக்கே நிற்கப்போவதில்லை. இந்நிலை, சர்வ சமய நிலை மனதில் தோன்றியவர்க்கு  மட்டுமே கிடைக்கப்பெறும்.    
     இவ்வாறு இந்து, முஸ்லீம், கிருத்துவம் என பிற மதத்தவர்களும், திருமூலர், தாயுமானவர், பட்டினத்தடிகள், திருப்போரூர் சிதம்பரசுவாமிகள், பேரூர் ஆதின சாந்தலிங்க சுவாமிகள், இராமலிங்க சுவாமிகள் போன்றோர்  அனைவருமே சமயங்கடந்த, சர்வ சமயத்தைத்தான் மிகவும்  வலியுறுத்தியுள்ளார்கள். திருவள்ளுவரும் ‘’பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’’ என்று சமயம் கடந்த, தகுதி கடந்த நிலையைத்தான் உறுதி செய்கிறார். இதுபோல் எண்ணற்ற ஞானிகள் சர்வசமயக் கொள்கையை வலியுறுத்தியுள்ளதின் மூலம் உண்மையை உணர்ந்து சமயங்கடந்த நிலையில் பேரின்பை நிலையைப்பெற்று அனைவரும் உய்வோமாக.



­­­­­_________

No comments:

Post a Comment