Monday, February 27, 2017

சிலப்பதிகாரப் பெருவிழா 2017

                சிலப்பதிகாரப்
                 பெருவிழா-2017

அன்னைத்தமிழின் மூவாயிரம் ஆண்டு இலக்கியவரலாற்றில் காலத்தால் முற்பட்ட காப்பியம் சிலப்பதிகாரம்;காலத்தால் மட்டுமின்றி கலைநலத்தாலும், கருத்துச்செறிவாலும், முத்தமிழ்க் கூறுகளும் முழுமையாகப் பெற்று,தமிழர் நாகரிகம் பற்றிய சமூக ஆவணமாகச் சிறந்திலங்குவது சிலப்பதிகாரம்  ஆகும்.அதன்பின் ஆயிரமாயிரம் காப்பியங்கள் மலர்ச்சி  பெற்றுத் தமிழின் வளர்ச்சிக்குச் சான்றாக விளங்குகின்றன .அத்தனைக் காப்பியங்களும் சுவையும் நயமும் பொருட்சிறப்பும் பெற்றனவே. ஆனால் தமிழருக்குத் தன்மானம், சுயமரியாதை,தமிழ்வீறு ஆகியவற்றை அளிக்கும் தனிச்சிறப்புப் பெற்ற ஒரே காப்பியம் சிலப்பதிகாரமேயாகும்.
சிலப்பதிகாரத்தைக் கற்கும் ஒவ்வொரு தமிழரும் தமிழ்க்கலை,தமிழிசை,தமிழ்நாடகம் ஆகியன பற்றிய தெளிந்த அறிவு பெறுவதுடனந்தமிழின ஒருமைப்பாட்டுணர்வும் பெறுதல் திண்ணம்.
சிலப்பதிகாரத்தைப் பரப்பினால் தமிழ்த்தேசியம், தமிழர் தன்மான உணர்வு ஆகியவற்றைத் தமிழ்ச் சமுதாயம் பெற்றிடும். பெற்றிடுவர்
“நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் என்றோர் மணீயாரம் படைத்த தமிழ்நாடு”எனப் பாரதியார் போற்றிய சிலப்பதிகாரத்தை உலகெல்லாம் பரப்பும் நோக்கத்துடன் சிலம்பொலி சு.செல்லப்பனார் சிலப்பதிகார அறக்கட்டளை என்னும் அமைப்பை 2014-ஆம் ஆண்டு நிறுவினார்.
சிலப்பதிகாரத்தைப் பரப்புதற்கு மாநாடுகள், கருத்தரங்குகள், கூட்டங்கள் நடத்திடுதலும் சிலப்பதிகாரத்திற்குத் தொண்டாற்றியவர்களுக்கு ஆண்டு தோறும் “இளங்கோ விருது”வழங்குதலும் இந்த அறக்கட்டளையின் செயல்முறைகளுள் அடங்கும்.
2014-இல் சென்னையிலும் 2015-இல் நாமக்கல்லிலும் சிலப்பதிகார மாநாடுகள் நடைபெற்றன.
2016 & 2017-ஆம் ஆண்டுக்கான இளங்கோ விருதுகளும் இளைய சிலம்பொலி விருதுகளும் 27/2/2017-ஆம் நாளில் சென்னையில் நடைபெற்ற  சிலப்பதிகாரப்பெருவிழாக்கள் சென்னை எம்.ஜி.ஆர்.-ஜானகி கல்லூரியுடன் இணைந்து அக் கல்லூரியில் நடைபெற்றன.
 
டாக்டர் எம்.ஜி.ஆர்-ஜானகி கலை அறிவியல் கல்லூரியின் தாளாளர் புரட்சித்தலைவர் அவர்களின் புகழ்பூத்த குடும்ப உறுப்பினர்களுள் ஒருவராகிய திருமதி. இலதா இராசேந்திரன் அவர்கள் குத்துவிளக்கேற்றி விழாவுக்கு ஒளியும் பொலிவும் வழங்கினார்.
முத்தமிழ்க்கலா வித்வ ரத்னம் ஔவை டி.கே.சண்முகனாரின் மூத்த புதல்வர் முதிரந்த இசைவாணர் தமிழிசைத்தென்றல் டி.கே.எஸ்.கலைவாணன் அவர்கள் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடினார்
27/2/2017-ஆம் நாள் காலை 10-30 மணிக்குத் தொடங்கிய விழாவில் இக் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவராகவும் மொழிப்புலத்தின் முதன்மையராகவும் பணியாற்றும் பேராசிரியர் அபிதாசபாபதி அவர்கள் கல்லூரியின்  சார்பாக வரவேற்புரை வழங்கினார்
விழாக்குழுவின் சார்பில்  கவிப்பேரருவி ஈரோடு தமிழன்பன் அவர்கள்  வரவேற்புரையாற்றினார்.அவர் தமது வரவேற்புரையில் சிலம்பின் தனிச்சிறப்புப் பற்றியும்  சிலப்பதிகார அறக்கட்டளை நிறுவிய சிலம்பொலியார் அவர்களின் தமிழ்ப்பணி பற்றியும் விரிவாகப் பேசினார்.
பி.ஜி.பி.கல்விக்குழமங்களின் தலைவரும் தொழிலதிபருமாகிய பழனி ஜி..பெரியசாமி அவர்கள் விழாவுக்குத்  தலைமை தாங்கினார் .புரட்சித்தலைவரின் பேரன்பினைப் பெற்றவர் பழனி ஜி..பெரியசாமி அவர்கள்.மக்கள்திலகத்தின் உடல்நலனைப் பேணும்வகையில் தக்கநேரத்தில் உற்ற துணை புரிந்தமையால் தமிழ்கூறு நல்லுலகெங்கும் அளவிலாப் புகழ்பெற்ற அருஞ்செயலாளர். சிறப்புவாய்ந்த பேராசிரியராக அமெரிக்கநாட்டில் பெருமிதமிக்க பணியாற்றியவர். கழனி செழிக்கவும் கட்டடங்கள் பெருகவும்  மருத்துவம் சிறந்தோங்கவும் தொழில்பல ஆற்றிடும் தொழிலதிபர்.இவற்றை விடச் சிலம்பொலியாரின் சிறப்புமிக்க மாணவர்களுள் தாமும் ஒருவர் என்பதனைப் பெருமையாகக் கருதும் பெருந்தகையாளர்.அழகுத்தமிழில் அருமைமிக்க தலைமையுரை ஆற்றினார்.
சென்னை உயர்நீதிமன்றத்தின் லோக் அதாலத் நடுவர். நீதியரசர் தி.ந.வள்ளிநாயகம் அவர்கள்  விருதுகள் அளித்து வாழ்த்துரை வழங்கினார். தமிழ்நாட்டில் துலைக்கோலின் முள்ளாக முறைவழங்கும் நடுவர்களின் நாயகம் எனப் பாராட்டத்தக்க நீதியரசர் தி.ந.வள்ளிநாயகம் அவர்கள் இனிய தமிழில் சிலம்பின் சீர்மையையும் சிலம்பொலியார் அவர்களின் தொண்டுள்ளத்தையும் போற்றித் தமது வாழ்த்துரையை வழங்கினார்.
2016-ஆம் ஆண்டுக்கான இளைய சிலம்பொலி விருது செல்வன்.கோ.சரவணன் அவர்களுக்கும் செல்வி கோ.சு.சிம்ஹாஞ்சனா அவர்களுக்கும் பேராசிரியர் இராம.குருநாதன் அவர்களாலும் விழிகள் தி.நடராசன் அவர்களாலும் வழங்கப்பட்டன.
2017-ஆம் ஆண்டுக்கான இளைய சிலம்பொலி விருது செல்வன் அருணை மா.மதன்குமார்  அவர்களுக்கும் செல்வி ஆர் சிரீகீர்த்தனா அவர்களுக்கும் கல்லூரி முதல்வர் பேராசிரியர் ஆர்.மணிமேகலை அவர்களால் வழங்கப்பட்டது.
2016-ஆம் ஆண்டுக்கான இளங்கோ விருது ‘சிலம்பொலியாரின் சீர்மிகு முன்னோடியாகிய  சிலம்புச்செல்வர் அவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்பெற்றது. ம.பொ.சி. அவர்களின் அன்புப்புதல்விகளுள் மாதவி பாஸ்கரன் அவர்களுக்கும்  கண்ணகி  அவர்களுக்கும் சிலம்புசெல்வரின் புதல்வர் திருநாவுக்கரசு அவர்களின் பிள்ளைகளுக்கும் பகிர்ந்து (உரூ.35,000 வீதம்) வழங்கப்பெற்றன.
2017-ஆம் ஆண்டுக்கான இளங்கோ விருது சேக்சுபியரையும் மில்டனையும் கீட்சையும் முழங்கிய வாயால் சிலப்பதிகாரத்தைச் செந்தமிழிலும் ஆங்கிலத்திலும் உலகெலாம் பரப்பிவரும் முனைவர் கா.செல்லப்பனார் அவர்களுக்கும் சிலம்பு மறு வாசிப்பு’ என்னும் நூலை இயற்றிய திறனாய்வாளர் பேராசிரியர் தி.சு.நடராசன் அவர்களுக்கும் பகிர்ந்து (உரூ.50,000/ வீதம்) வழங்கப்பெற்றன.
நிறைவாக முனைவர் கா.செல்லப்பனார் அவர்கள், இளங்கோ அடிகளையும் சேக்சுபியரையும் ஒப்பீடு செய்து ஓர் அரிய உரையாற்றினார்.
டாக்டர் எம்.ஜி.ஆர்-ஜானகி கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் பதின்மர் கொண்ட நாட்டியக்குழு வித்தகக் கலைஞர்களின் வழிகாட்டுதலில் முத்தமிழ்க்காப்பியமாம் சிலப்பதிகாரத்தை நாட்டியநிகழ்ச்சியாகக் கலைநலன் மிளிர நடத்தி அவையினர் அனைவரையும் வைத்த கண் இமைக்காமல் பார்க்கவைத்தது.
 மக்கள் திலகம்,புரட்சித்தலைவர் எனத் தமிழ்கூறு நல்லுலகினரால் போற்றப்பட்ட எம்.ஜி.ஆர் அவர்களின் நினைவைப் போற்றும் அறப்பணிகளுள் ஒன்றாகிய டாக்டர் எம்.ஜி.ஆர்-ஜானகி கலை அறிவியல் கல்லூரி இந்தச் சிலப்பதிகாரப் பெருவிழாவை, சிலப்பதிகார அறக்கட்டளையுடன் ஒருங்கிணைந்து நடத்தியது. இப் பெருவிழாவை ஈடற்ற முறையில் நடத்திய கல்லூரியும் அதன் தாளாளரும் முதல்வரும் தமிழ்த்துறைத்தலைவரும் தமிழ்ப் பேராசிரியர்களும் ஏனைய துறைத்தலைவர்களும் பேராசிரியர்களும் திரளாக வந்திருந்து  விழா சிறக்கக் காரணமாகத் திகழ்ந்த மாணவிகளும் உற்றுழி உதவிய ஊழியர்களும் பாராட்டுக்கு உரியவர்கள்.
சிலப்பதிகார அறக்கட்டளைச் செயலாளரும்  சிலம்பொலியாரின் அன்புப்புதல்விகளுள் ஒருவருமாகிய  நூலாசிரியர், சொற்பொழிவாளர்,முனைவர் மணிமேகலை புஷ்பராஜ் அவர்கள்,விழாத் தொகுப்பாளர் திருமதி உமா அமராபதி அவர்கள், கணியச்சுப் பணிகளையும் இணையத் தொடர்பையும் சிறப்புடன் மேற்கொண்ட சிலம்பொலியாரின் மருகர் பொறியாளர் புஷ்பராஜ் அவர்கள், சிலம்பொலியாரின் புதல்வர்  கொங்குவேள்,அவருடைய துணைவியார்,சிலம்பொலியாரின் மற்றொரு புதல்வி மருத்துவர்.கௌதமி அவர்கள்,ஏனைய உறவினர்கள்,வழக்கறிஞர் பால.சீனிவாசன்,திருமதி.வாசுகி பத்ரிநாராயணன்,அமிழ்தத்தமிழாய்வு மன்ற அமைப்பாளர் இளவர அமிழ்தன் என விழா சிறப்பாக நடைபெறத் தொண்டாற்றியோர் பலராவர்.
மாணவியர் திரளும் நகர்ச்சான்றோர்கள் திரளும் எனப் பெருங்கூட்டம் அவையை அணிசெய்தது. திரளாக வந்திருந்து விழா சிறக்க உதவிய பார்வையாளர்களில் டாக்டர் எம்.ஜி.ஆர்-ஜானகி கலை அறிவியல் கல்லூரி மாணவிகளுடன் சென்னைப்பல்கலைக்கழக மொழித்துறை, இலக்கியத்துறை மாணவர்களும் அரசிமேரி கல்லூரி மாணவிகளும் மாநிலக்கல்லூரி மாணவர்களும் பேராசிரியர்களும் பாவலர்களும் எழுத்தாளர்களும் எனப் பட்டியல் நீண்டுகொண்டே செல்லும்.
சென்னைக்கம்பன் கழகச் செயலாளர் இலக்கியவீதி இனியவன்,அம்பத்தூர்க் கம்பன் கழகச் செயலாளர் பழ.பழனியப்பம்,இலக்கியச்சிந்தனை அமைப்பின் செயலர் ப.இலக்குமணன்,வியாசர்பாடி முத்தமிழ் மன்றச் செயலாளர் கா.ஆதிகேசவன்,ஒய்.எம்.சி.ஏ.பட்டிமன்றச் செயலர் கெ.பக்தவத்சலம்,கவிஞர் மு.மேத்தா,கவிஞர் நா.காமராசன்,கவிஞர் அறிவுமதி,புதுகைத்தென்றல் ஆசிரியர் தருமராசன், கி.ஆ.பெ.அவர்களின் புதல்வியார் மணிமேகலை கண்ணன், பன்மொழிப்புலவர் கண்ணன்,மூத்த வழக்கறிஞர் காந்தி,சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத்தலைவர் ஒப்பிலா மதிவாணன், பேராசிரியர் ய.மணிகண்டன், மாநிலக்கல்லூரிப் பேராசிரியர்கள்,விவேகானந்தா கல்லூரிப் பேராசிரியர்கள் என அவையினரின் பட்டியலை விரித்துரைத்தால் தலைநகரின் தலைசிறந்த வித்தகர்களின் பட்டியலாகச் சிறந்துவிளங்கும்.
தேமதுரத் தமிழோசை உலகமெலாம் முழங்கிவரும் பேரறிஞர், சிலம்பொலியார் அவர்களின் சிறப்பும் இளங்கோவின் உயர்வும் உள்ளம் நிறைக்கும் வகையில் விழா சிறப்பாக நடைபெற்றது.


No comments:

Post a Comment