Sunday, May 24, 2015

கந்தரனுபூதி--வாசுகி அம்மையார் பொழிவு



கோவையில் வாசுகி கண்ணப்பனாரின்        சைவத்தமிழ் முழக்கம்

சைவ சித்தாந்தப் பெருமன்றம் 110 ஆம் ஆண்டுவிழா மாநாடு சிரவையாதீனம் தவத்திரு குமரகுருபர சுவாமிகள் அவர்களுடன் இணைந்து கோயம்பத்தூர் சின்னவேடம்பட்டி, கௌமார மடாலயத்தில், 2015 மே மாதம் 15, 16,, 17 நாள்களில் சிறப்பாக நடைபெற்றது.
     அவ்வமயம் 16 ஆம் நாள் நடந்த சைவ மகளிர் மாநாட்டில் ‘கந்தர் அநுபூதி’ என்னும் தலைப்பில் முனைவர் வாசுகி கண்ணப்பன் மிகச் சிறப்பான சொற்பொழிவு ஆற்றினார்.இவர் பல்மருத்துவத் துறையில் புகழ்நிறுவியவரும் சிறந்த தமிழறிஞருமாகிய நம் அனைவரின் நினைவில் வாழும் ஜே.ஜி.கண்ணப்பன் அவர்களின் துணைவியார் என்பதும் முழுநேர ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்ற வாசுகி அவர்கள் முத்தமிழிலும் மூதறிவு பெற்ற தமிழறிஞர் என்பதும் இங்குக்  குறிப்பிடத் தக்கவையாகும்..

தமது சொற்பொழிவின் தொடக்கத்தில் தென்னாட்டின் பெருமையைச் சிறப்பாகப் பின்வருமாறு அவர் தொகுத்துரைத்தார்

“கந்தரநுபூதி படைத்த பெருமகனார் அருணகிரிநாதசுவாமிகள், நான்கு திசைகளை வர்ணிக்கும்போது வடதிசை, குடதிசை, கீழ்த்திசை, செஞ்சொல் மாதிசை என்கின்றார். மா என்கின்றோபோதே அதன் பெருமை உள்ளங்கை நெல்லிக்கனியென உணரமுடிகிறது. அப்படிப்பட்ட தென்திசை உயர்ந்த திசை  என்று, 500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த வில்லிபுத்தூர் ஆழ்வார் ‘’சித்திக்கொரு விதையாகிய தென்னாடு’’ என்று கூறியுள்ளார். 1008 சிவத் தலங்கள் கொண்ட திருநாடு தென்னாடு. அதனால்தான் ‘’தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி’’ என்று பாடிப் பரவசமடைந்தனர். 63 நாயன்மார்களும், 12 ஆழ்வார்களும் அவதரித்த புண்ணிய நாடு தென்னாடு. மெய்கண்ட சிவம், அருணந்தி சிவம், அருணகிரிநாதர், குமரகுருபரர், தாயுமானவர், இராமலிங்க அடிகளார், பாம்பன் சுவாமிகள் போன்ற எண்ணற்ற ஞானிகள் வாழையடி வாழையாக வாழ்ந்துவரும் நாடு தென்னாடு. முச்சங்கம் கண்ட நாடு தென்னாடு. அத்தகைய தென்னாட்டில் பிறந்தோம் என்ற எண்ணத்தால் புளங்காகிதம் அடைந்து நாம் பெருமைப்படவேண்டும்.” என்று தென்னாட்டின் பெருமயைக் கூறியவர் “ அத்தகைய பெரியவர்களில் ஒருவரான அருணகிரியார் படைத்த கந்தரநுபூதியைப்பற்றி சிந்திக்கும் பாக்கியம் பெற்றேன் என்று எண்ணுகின்றபோது “என்ன புண்ணியம் செய்தனை நெஞ்சமே” என்று பாடத்தோன்றுகின்றது. ” என வியந்துரைத்தார்.
அடுத்து அருணகிரிநாதரின் மாண்பை விளக்கும்வகையில் அவர் பேசியதாவது:

கந்தர் அநுபூதியின் ஆசிரியர் அருணகிரிநாதசுவாமிகள் ஆவார். உயிரையும், உணர்வையும், உரையையும், அறிவையும் தான் வணங்கும் அறிவின் உருவமாக, தமிழின் கடவுளாக, அழகின் சொரூபமாக, ஞானத்தின் விளக்கமாக விளங்கும் முருகப்பெருமானுக்கு அர்ப்பணித்து மகிழ்ச்சிகொண்டவர், மகிழ்ச்சி கண்டவர். இவர் 14ஆம் நூற்றாண்டில்,  முத்தம்மைக்கு மகனாகப் பிறந்தவர். தாய், சிவபெருமானை வேண்டி தவமிருந்து பெற்றார் இக்குழந்தையை. இவர் தாயிற்குப்பின் தமக்கை ஆதிலட்ஷிமியால் பேணப்பட்டவர். பிரபுட தேவ மகாராஜன் காலத்தில் திருவண்ணாமலையில் வாழ்ந்தவர். ஆண்டவனிடம் உபதேசம் பெற்றவர்களில் மனித சமுதாயத்தில் அருணகிரிநாதரைத் தவிர வேறுயாரும் இல்லை. முருகபெருமானின் திருவருள் முற்றும் பெற்றவர். உலகப்பற்றை முழுவதுமாகத் துறந்த மா முனிவர். அகந்தைகொண்ட வில்லிபுத்தூராரை வென்று, தண்டிக்காது புத்தி புகட்டியவர். அதனால் ‘’கருணைக்கு அருணகிரி’’ என மனதார, வாயாரப் போற்றப்பட்டவர். போற்றப்படுபவர். இவரைப்போல் உண்மைப் பொருள்களைத் தெளிவாகச் சொன்னவர்கள் இல்லை என்பதை
           ‘’ஐயா அருணகிரி அப்பா உனைப்போல
            மெய்யாக ஓர் சொல் விளம்பினர்யார் – வையகத்தோர்
            சாற்றரிதென்று ஏசற்றார் தன்னனையாய் முக்கண் எந்தை
            நாற்றிசைக்கும் கைகாட்டினான்’’
எனப்பாடி தாயுமானவர் அவருக்கிணை அவர் மட்டுமேயாவார் என்கின்றார். சிவபெருமான் வாய்விட்டுச் சொல்லாததைச் சொல்லியவர் அருணகிரியார்.
     இவர் மதாணி என்று கூறப்படும் நவரத்ன மணிகள் கொண்ட பதக்கமாக, திருப்புகழ், திருவகுப்பு, திருஎழுகூட்டிருக்கை, வேல் விருத்தம், மயில் விருத்தம், சேவல் விருத்தம், கந்தரலங்காரம் கந்தரந்தாதி, கந்தரநுபூதி புனைந்து, படைத்து கந்தனுக்கு அதனை அணிவித்து மகிழ்ந்தவர். அதனில் இக்கந்தரநுபூதி ஒரு மணியாகும்.
     அருணகிரியார் யாரும் இதுவரை பாடியிராத சந்தப்பாடல்களானத் திருப்புகழைப் பாடினார். ஆனாலும மன நிறைவு அடையமுடியவில்லை. ஆசைப் பெருகிக்கொண்டே இருந்தது. அவரே,
           ‘’ஆசை கூர் பக்தனேன் மனோ பத்ம மான பூவைத்து நடுவேஅன்
           பான நூலிட்டு நாவிலேசித்ர மாகவே கட்டி ஒருஞான
           வாசம்வீ சிப்ர காசியா நிற்ப மாசிலோர் புத்தி அளிபாட
           மாத்ருகா புஷ்ப மாலைகோலப்ர வாள பாதத்தில் அணிவேனா?’’ எனப் பாடுகின்றார். மாத்ருகா மாலை என்பது நெடுங்கணக்குப் பெயர். எழுத்துக்களின் வரிசைக்குப் பெயர்.  அதாவது மனமாகியத் தாமரையைக் குஞ்சமாக வைத்து, சொல் மலர்களை அன்பான நூலினால் மிக மிக அழகாகவும், விளக்கமாகவும் கட்ட, அதில் ஞானமாகிய மணம் வீசவேண்டும். அந்த ஞான மணத்தைக்கண்டு பெரியோர்களாகளுடைய உள்ளங்களாகிய வண்டுகள் மொய்க்கவேண்டும். அப்படி ஓர் அழகான பூ மாலையை உன்னுடைய பவளம்போன்ற திருவடிக்குச் சாத்தவேண்டும் என்று அருணகிரிநாதர் ஆசைப்பட்டு அந்த ஞான முதிர்ச்சியில் பாடியதாகும், இது மிகச் சிறந்த பாராயண நூல். தாயுமானசுவாமிகள், திருப்போரூர் சிதம்பரசுவாமிகள் மற்றும் பலரும்  இப்பாடலை வெகுவாகப் புகழ்ந்துப் பாராட்டி மகிழ்ந்துள்ளார்கள். இவருடைய சரிதத்தை பலரும் பல வகைகளில் விரிவாக எழுதியுள்ளனர்.”
அருணகிரியாரின் பெருமையை விரித்துரைத்த வாசுகி கண்ணப்பனார் கந்தர் அனுபூதி பற்றிய ஒரு பத்திச்சுவைமிக்க பொழிவினை ஆற்றி அவையோர் அறிவுக்கு விருந்தளித்தார்.அவரது முழுப்பொழிவையும் இங்கே அளித்துள்ளோம்:
                                கந்தர்    
     முருகனுக்குப் பலப் பல பெயர்கள் உண்டு. ஒவ்வொரு பெயருக்கும் தனிச் சிறப்பு உண்டு.   நமது கௌமார மடம் வியப்புக்குரிய வகையில் 42 பெயர்களையும் அதற்கான பயன்கள் 58 எனவும் பதிவு செய்துள்ளது. அதனை நம் சைவசித்தாந்த இம்மாத இதழும் வெளியிட்டுள்ளது போற்றுதற்குரியது. வாகீச கலாநிதி கி.வ.ஜகந்நாதன் அவர்கள் படைத்த அநுபூதி விளக்கம் என்ற நூலில் வியக்கும் வண்ணம் முருகனுக்கு 100 பெயர்களைப் பதிவு செய்துள்ளார்.
     முருகனின் பல பெயர்களில் ஒன்றான கந்தர் என்ற சொல்லுக்கு பல பொருட்கள் உண்டு. இச்சொல்பற்றி வடமொழியில், ஸ்கந்தன் என்பதற்கு. நிகண்டில், பகைவரின் பராக்ரமத்தை ஒடுக்கச் செய்யக்கூடிய புஜபலபராக்ரமசாலி என்கின்றது. கந்தர் என்றால் தமிழ் இலக்கணத்தின்படி சேர்க்கப்பட்ட ஒன்று, சேர்க்கப்பட்டவன் என்று பொருள் கூறப்படுகிறது. கந்தபுராணத்தில் கச்சியப்ப சிவாச்சாரியார் சிவபெருமான் பார்வதியிடம்    
     ‘’சேயவன் உருவம் ஆறும் திரட்டி நீ ஒன்றாய்ச் செய்தாய்
      ஆயதனாலே கந்தன் ஆம் எனும் நாமம் பெற்றான்’’ என்பதாய் கூறுகின்றார். அதாவது ஆறு குழந்தைகளாக இருந்தவர்களை வாரி அணைத்து பார்வதி தேவியாரால் ஒரு குழந்தையாகச் சேர்க்கப்பட்டவர் என்கின்றார். கந்தர் கலிவெண்பாவும் இதே கருத்தைச் சொல்கின்றது.
          ‘’காமத்தால் கெட்டவன் தசரதன்
           குரோதத்தால் கெட்டவன் சிசுபாலன்
           லோபத்தால் கெட்டவன் துரியோதனன்
           மோகத்தால் கெட்டவன் இராவணன்
           மதத்தால் நானே பெரியவன் என்று கெட்டவன் சூரபத்மன்
           மாற்சரியத்தால் கெட்டவன் கம்சன்’’
மனதின் உள்ளே இருக்கின்ற பகைவர்களாகிய இந்த காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாற்சரியம் முதலியவைகளை அழிக்கிறவனுக்கு கந்தன் என்று பெயர். இந்த அறுவர்களையும் அறுபவர்களாக்கிவிடுபவன் கந்தன். 
     யானைக் கட்டுத்தறிக்கு கந்து என்று பெயர். ‘’கந்து களிக்குங் கடாக் களிற்றின் வந்து…..’’ என்று புகழேந்திப் புலவர் நளவெண்பாவில் பாடியுள்ளார். உயிர்களாகிய யானைகளைக் கட்டுந் தறி போன்றவன் கந்தன். கந்தன் என்றால்  பற்றுக்கோடு என்றொரு பொருள் உண்டு. உயிர்களுக்கு உலகப்பற்றாகிய நோயைத் தீர்க்கும் பற்றுக்கோடாக அவர் இருப்பதால் கந்தன் என்ப்படுகிறார். பிரிந்திருக்கும் உயிர்களை பிரம்மமுடன் அனுபூதியால் சேர்க்கின்றவர்.
                                    


                               அநுபூதி
     அநு என்றால் தொடர்வது என்று பொருள். ‘’பூதி’’ என்றால் ஒன்றுபடுதல் என்று பொருள். ஆகவே கந்தரோடு ஒன்றுபடுவது கந்தர் அநுபூதி. சிவத்தோடு ஒன்றுபடுவது சிவாநுபூதி.
     அனுபவம் என்பது experience. அனுபூதி என்பது ever continuing experience தொடர்ந்த மறக்க இயலா அனுபவம். அதாவது ஒரு சிறிதும் மனதிலிருந்து நீங்காது நிலைத்திருப்பது. அருணகிரிநாதர் முருகபெருமானால் அருள் பெற்றபின் அவ்வுணர்விலேயே நீக்கமற நிலைபெற்றுவிட்ட நிலை. அதாவது ஜீவனாய் இருக்கின்ற தன்னை, பிரமம் தன்னுடன் இணைத்துக்கொண்டு, நீங்கா நிலையில் நிலைத்துவிட்ட நிலைதான் அநுபூதி நிலை.    
    
                 பல்வேறு கருத்துகள்
     அநுபூதியைப் பற்றிய பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன. அருணகிரியாரின் நூல்களில் வில்லிபுத்தூராருடன் வாதம் செய்யும் வகையில் படைக்கப்பட்ட கந்தரந்தாதி மட்டும்தான் முழுமையாக படைக்கப்பட்டது. மற்றவை சிதறிக்கிடந்த பல பாடல்களையெல்லாம் கண்டறியப்பட்டு தா.சுப்பிரமணிய பிள்ளை, தணிகைமணி வ.சு செங்கல்வராயப் பிள்ளை அவர்களால் சேகரிக்கப்பட்டு தொகுக்கப்பட்டது. அதிலும் பிரபுட தேவமகாராஜாவின் வேண்டுகோளின்படி, அவரின் கண்பார்வையைப் பெருவதற்காக பாரிஜாத மலர் கொண்டுவருவதற்காக கூடுவிட்டுக் கூடு பாய்ந்து கிளி உருவம் எடுத்த நிலையில், பொறாமைகொண்ட தேவி உபாசகர் சம்பந்தாண்டாரின் சூழ்ச்சியினால் உடல் எரிக்கப்பட்டு கிளி உருவிலேயே இக்கந்தரநுபூதி பாடப்பட்டது என்கின்றனர். இதனை, பாம்பன் சுவாமிகள் ஏற்கவில்லை.
   முதன் முதலில் கந்தரநுபூதியாகத் தொகுக்கப்பட்டது 43 பாடல்கள்தான். அடுத்து தொகுக்கப்பட்டது 51 பாடல்கள். இதனில் முதலில் விநாயகர் காப்புச் செய்யுளாக ’’நெஞ்சக்கனகல்லும்’’ என்று தொடங்கப்பட்டு.  நடைமுறையில் பாடப்படுகிறது.. இவ்வகையில்தான் திருமுருக கிருபானந்தவாரியார் அவர்களும் அதற்கான உரையை மிக அழகாக எழுதியிருக்கிறார். ஆனால் பாம்பன் சுவாமிகள் இதனையும் ஏற்கவில்லை. நூலின் முதல் பாடலான
           ‘’ஆடும் பரிவேல் அணிசே வல்எனப்
            பாடும் பணியே பணியா அருள்வாய்
            தேடும் கயமா முகனைச் செருவில்
            சாடும் தனியா னைசகோ தரனே’’
என்பதில் யானை என விநாயக பெருமான் குறிக்கப்படுவதால் இதுவே காப்புச் செய்யுளாகும் என்கிறார். மேலும் 43 ஆம் பாடலில்
           ‘’ தூசாம் அணியும் துகிலும் புனைவாள்
            நேசா முருகா நினது அன்பு அருளால்
            ஆசா நிகளம் துகள்ஆ யினபின்
            பேசா அநுபூ திபிறந் ததுவே’’   
என்பதில் பேசா அநுபூதி பிறந்ததுவே எனக்கூறி முற்றுப்பெற்றதாகக் கருதுகின்றார்.
     101 பாடல்களைக்கொண்டும் கந்தரநுபூதி படைக்கப்பட்டுள்ளது.  ஆனால் அது பெருமளவு அங்கீகரிக்கப்படவில்லை.
     மேலும் 51 பாடல்களுக்கும் சக்கரம் வரைந்து பூசை செய்யும் வகையிலும் படைக்கப்பட்டது. மறைமலை அடிகளாரின் சீடர் மாம்பாக்கம் அழகரடிகள் அவர்கள் அச்சக்கரத்தை உருவாக்கினார். ஆனால் பாம்பன் சுவாமிகள் சக்கரம் வைத்து வழிபடுவதை ஏற்கவில்லை. இவைகள் எல்லாமே ஆராய்ச்சிக்குரியது. இருப்பினும் உலவும் கருத்துகளைத் உவக்கவேண்டும் என்ற நிலையில் உவந்து மகிழ்கின்றேன்.   
   கந்தரநுபூதி மிக எளிய வடிவில் நான்கு சீர்களில், நான்கு அடிகளில் கலிவிருத்தத்தால் அமைத்து எளிதில் மனனம் செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. பாடல்கள் உருவில் சிறியது, பொருளில் ஆழ்ந்த நுட்பமும், திட்பமும் நிறைந்த சாத்திர நூலாகும்.  படிப்பவர்களுக்கு மிகச் சுலபமாகப் படைக்கப்பட்டுள்ளது. மேலும் கிளி வடிவில், கிளி மொழியில் அமைந்துள்ளதால் பாடுவதற்கு எளிமையாக உள்ளது என்று சொல்லப்படுகிறது.

                     கிளியின் வாக்கு
     அருணகிரி பெருமான் மற்றவர்களைப்போல் இறக்கவில்லை, திடீரென கிளியாக மாறி மறைந்துவிட்டார். இறைவனின் திருக்கரத்தில் நிலைகொண்டார் என்ற கருத்தும் நிலவுகின்றது. . அந்நிலையில் கந்தரனுபூதியைப் பாடினார். கிளி என்றால் பொதுவாகச் சொல்லப்படுவது ‘’சொன்னதைச் சொல்லுமாம் கிளிப்பிள்ளை’’ என்பது. கிளி தானாகப் பேசாது. சொல்லிக்கொடுத்தால் திருப்பிச் சொல்லும். அருணகிரிநாதர் இவ்வுலகில் இருந்தவரை இறைவன் அருள் துணையிருக்கத் தாமே நினைத்துப் பாடினார். இப்பௌதிக உலகைவிட்டுச் சென்றார். இறைவனின் திருவருள் மயமான உடம்புடன் கிளியாக இறைவன் திருக்கரத்தில் நிலைபெற்றார். அப்பொழுது அக்கிளி பேசியது. அநுபூதியைப் பாடியது. கிளியா பாடியது. முருகன் சொன்னார் கிளி அப்படியே சொன்னது.  மனிதப் பிறவியைப்பாடிய பாட்டில் மனித உள்ளம் இருக்கும். அநுபூதியில் இறைவனின் செய்திகளெல்லாம் நிறைந்திருக்கும். அதனில் மற்ற பாடல்களில் இல்லாத ஒரு ஞான மணமும், திருவருட் செறிவும் நிறைந்திருப்பதை உணரலாம். இதனை உணர்ந்த நிலையில் இப்பாடலைக் கிளி மொழியில், கிளி குரலில்
           ‘’நெஞ்சக் கனகல் லும்நெகிழ்ந்(து) உருகந்
            தஞ்சத் தருள்சண் முகனுக்(கு) இயல்சேர்
            செஞ்சொற் புனைமா லைசிறந் திடவே
            பஞ்சக்கர ஆனைபதம் பணிவோம்’’
எனப் படிக்கும் பழக்கமும் சிலர் கொண்டிருந்தனர் என்கின்றனர். 40 வருடங்களுக்கு முன் வாழ்ந்த திண்டுக்கல் வக்கீல் பி.கே.சண்முநாதன் அவர்களும் இதனை ஏற்கின்றார்கள்.
     பேரறிஞர் கி.வா.ஜகந்நாதன் அவர்கள் முதல் பாடலை ‘’ஆடும்பரி வேல்’’ என ப்ரணவத்தை வைத்து ஆரம்பித்துள்ளது போற்றுதற்குரியது என்று பாராட்டுகின்றார்.

             சிந்திப்பதற்கான சில கருத்துகள்
      இறைவனுக்கு முக்கியமான இரண்டு இலக்கணங்கள் உண்டு. அதாவது சொரூப இலக்கணம், தடத்த இலக்கணம். சொரூப இலக்கணத்தில் இறைவன் தன்னில் தானாக இருப்பவர். எந்த ஊரோ, பெயரோ இருக்காது. தடத்த இலக்கணத்தில் அயலிடத்தில், அருகில், வடிவங்கள், அலங்காரத்துடன் அமைக்கப்படலாம். இப்பாடல், அநுபூதி என்பதால் இது சொரூப இலக்கணத்தில் அகண்டாகாரமாகத்தான் இருத்தல் வேண்டும். எங்கும், எந்தப் பெயரும், தலமும் குறிப்பிடப்படமாட்டாது. ஏனெனில் அனைத்தும் கடந்த நிலையில், இறைவனைவிட்டு என்றும் நீங்கா நிலையில், உணர்வில் கலந்திருக்கும் நிலையில் உள்ளவர் அருணகிரியார்.
     51 பாடல்களிலும் எங்கும் எத்தலமும், எந்தப் பெயரும் குறிப்பிடப்படவில்லை. சமத்காரமாகத் தன் திறமையைக் காட்டுவதற்காக, சிவத்தலங்கள் விளக்கப்படுகின்றன. உதாரணமாக  11ஆவது பாடலில் மூன்றாவது வரியில் வரும் ‘’நாகாசலம்’’ என்பதற்கு திருப்பதி, திருச்செங்கோடு எனக்கூறுவர். ஆனால் நாகா என்றால் இளமை, அசலம் என்றால் அசையாதது, குன்றாதது எனப் பொருள்படும். எனவே இளமை குன்றாதவனே என்று கூறுவதாக அமையும். ஆகவே கந்தரநுபூதி  அநுபூதி என்ற நிலையில் சொரூப இலக்கணத்தில் அமைந்துள்ளது சொரூப ஞானத்தைத் தரவல்லது எனத் தெளிவுறலாம்,
     சொரூப ஞானம் எனப்பார்க்கும்பொழுது காலத்தின் அருமை கருதி ஒரு பாடலைப்பார்க்கும் நிலையில் மிக முக்கியமான உயர்ந்தப் பாடலாகக் கருதப்படும் இரண்டாம் பாடலான,
           ‘’உல்லா சநிராகுல யோக விதச்
            சல்லாப விநோதனும் நீ அலையோ
            எல்லாம் அற என்னை இழந்த நலம்
            சொல்லாய் முருகா! கர பூபதியே’’   
என்ற பாடலில், உல்லாசம் என்பது எக்காலத்திலும் மாறுபாடில்லாது ஒரே தன்மையுடன் அதாவது புத்தியில் சஞ்சலமில்லாது உறுதியாய் இருத்தல் என்பதாகும். நிராகுல என்பது ஞான வடிவானவன், அறிவுடையவன் என்பதால் துன்பம் வந்தபோதும் துன்பம் கொள்ளமாட்டான் என்றறியப்படும். யோகம் என்பது யோகத்தால்தான் இன்பம் வரும் என உணர்த்தப்படுகிறது. கணவனும், மனைவியும் ஒன்றுபட்டால்தான் சிற்றின்பம், இறைவனும், ஆன்மாவும் ஒன்றுபட்டால்தான் பேரின்பம்.
     உல்லாசம் என்றால் சத்து, நிராகுல என்றால்  சித்து, யோகம் என்றால் ஆனந்தம். அதாவது சச்சிதானந்தமாகிய இறைவனே! என்ற ஆழமானப் பொருளைக் கொண்டுள்ளது.   அதாவது இறைவன் சச்சிதானந்தம் வேண்டுமென்று நினைக்கின்றான், பேசுகின்றான், பின் செய்கின்றான். இறைவன் உண்மை வடிவாயிருந்து நமக்கு அனைத்தையும் செய்கின்றான்.
·              உல்லாச, நிராகுல, யோகம் என்பதற்கு மற்றொரு பொருளும் உண்டு. உல்லாசம் என்றால், என்றும் ஒரே தன்மையாக மேன்மையாக இருத்தல். எது மேன்மையான மலை? திருபரங்குன்றம். அதுதான் மூலாதாரம், அதாவது உல்லாசம்.
·              நிராகுலம் என்றால் துன்பமற்று ஞானமயமாக இருப்பது. அதாவது திருச்செந்தூர். அது சுவாதிஷ்டானம்.
·         யோகம் என்ற வகையில் யோகக் கலையில் இன்பத்தைத் தருவது. அதுதான் பழநி மலை. அது மணிபூரகம்.
·         இத என்பது இதமாக இருப்பது. சுவாமி மலை. இது அநாகதம்.
·              சல்லாபம் என்றால் மலைகள்தோறும் விளையாடுதல். குன்றுதோறாடல் இது விசுத்தி.
·         விநோதம் என்பது பழமுதிர்ச்சோலை. அது ஆக்ஞை,
இப்படி ஆறு ஆதாரங்களில்  எழுந்தருளியுள்ள பெருமானே, நீ அல்லவா   உபதேசம் சொல்ல வேண்டும். எல்லாம் அற, நான் என்ற ஆணவம் நீங்க, என்னை இழந்த நலம் பெற்று,   ஞானம் பெறவைக்கவைக்கவேண்டும் என்ற கருத்தை உணர்ந்து தெளியலாம்.
   இறுதியாக உள்ள பாடல் கூட கந்தரநுபூதியில் உள்ளதா  என்பது உறுதியாகக் கூறமுடியாது. சேர்க்கப்பட்ட பாடலாகக்கூட இருக்கலாம், ஆனால் தவத்திரு கிருபானந்தவாரியார் அவர்கள் இப்பாடலைப் பாடித்தான் தன் சொற்பொழிவை நிறைவு செய்வார்கள்.
             ‘’உருவா யருவா யுளதா யிலதாய்
               மருவாய் மலராய் மணியாய் யொளியாய்க்
               கருவா யுயிராய்க் கதியாய் விதியாய்க்\
               குருவாய் வருவா யருள்வாய் குகனே’’
என்ற பாடலில் உரு, அரு, உளது, இலது, மணம், மலர், மணி, ஒளி, கரு, உயிர், கதி, விதி, முதலிய எல்லாமாய் நின்று குகப் பரம்பொருளே! தேவரீர் அடியேனுக்கு குருவாக வந்து அருள் புரிவீர் என்று வேண்டுகின்றார். உருவாய் வருவாய் அருள்வாய் குகனே. அருவாய் வருவாய் அருள்வாய் குகனே, உளதாய், வருவாய் அருள்வாய் குகனே, இலதாய் வருவாய் அருள்வாய் குகனே, மருவாய் வருவாய் அருள்வாய் குகனே, மலராய் வருவாய் அருள்வாய் குகனே, மணியாய் வருவாய் அருள்வாய் குகனே. ஒளியாய் வருவாய் அருள்வாய் குகனே. கருவாய் வருவாய் அருள்வாய் குகனே, கதியாய் வருவாய் அருள்வாய் குகனே, விதியாய் வருவாய் அருள்வாய் குகனே, குருவாய் வருவாய் அருள்வாய் குகனே! எனப்பாடி மன நிறைவு கொள்ளலாம்.”
வாசுகி கண்ணப்பனார் ஆற்றிய பொழிவு அனைவராலும் பாராட்டப்பட்டது.காரைக்காலம்மையாரின் கவின் தமிழோ!கோதைநாச்சியாரின் கொஞ்சுதமிழோ!என வியந்திடும் வகையில் நயமிக்க சொல்லாடலும் செவிக்கினிய இசை விருந்தும் வாசுகி அம்மையாரின் தனிச்சிறப்புகளாகும்.தம் துனைவர் வழிநின்று தமிழையும் சைவத்தையும் தம்மிரு கண்களாகப் போற்றி பல்வேறு இலக்கிய மைப்புகளில் வாசுகி அம்மையார் தமிழ்ப்பணி ஆற்றிவருவது இங்குக் குறிப்பிடப்பட வேண்டிய செய்தியாகும்.சென்னைக் கம்பன் கழகச் செயற்குழு உறுப்பினராகவும் அனைத்து இந்தியத் தமிழ் எழுத்தாளர் மன்றச் செயலாளராகவும் இவர் திறம்படப் பணியாற்றி வருகிறார்.

தமது சொற்பொழிவின் முடிவில் அவர் நிறைவாக உரைத்தவை:

கடல் மணலை எண்ணி விடலாம், பிறவிகளின் எண்ணிக்கையை எண்ணவே முடியாது. அப்படிப்பட்ட எண்ணிலடங்கா பிறவிகள் எடுக்கும் உயிரானது, விடாது நாள்தோறும் மனதினிலுள்ள மாசினைக் களையவேண்டும். அதாவது நான் என்ற மாசு அகற்றப்படவேண்டும் அகற்றினால்தான் பிறவிப் பிணியினின்று விடுபடமுடியும். ஆடைகளில், பாத்திரங்களில் உள்ள மாசு அதாவது அழுக்கினை அகற்ற அதற்கானப் பொருள்களைக் கொண்டு துலக்கவேண்டும். அதேபோல் ஆன்ம போதத்தினால் வரும் ஆசை, ஆசையினால் வரும் கோபம்,  கோபத்தினால் வரும் மயக்கம்,  மயக்கத்தினால் வருகின்ற தடுமாற்றம், தடுமாற்றத்தால் பிறரைக் கெடுக்கின்ற பகை போன்ற மனத்திலுள்ள நோய்கள் குணமாகவேண்டுமென்றால் ‘’கந்தர் அநுபூதி’’ என்ற மருந்து உணரப்படவேண்டும், ஏற்கப்படவேண்டும், அன்றாடம் ஓதப்படவேண்டும். பல பிறவிகளில் சேர்த்துவைத்த வினைகள் ஒரு செயல்பாட்டில் தீருமா? என எண்ணலாம். அக்கருத்தை அப்பர் அடிகள்,
             “ விண்ணுற அடுக்கிய விறகின் வெவ்வழல்
               உண்ணிய புகிலவை ஒன்று மில்லையாம்
               பண்ணிய வுலகினிற் பயின்ற பாவத்தை
               நண்ணிநின் றறுப்பது நமச்சி வாயவே’’
எனப்பாடி மிக அழகாக தெளிவுறுத்துகின்றார். ஆகவே கருணையே வடிவான முருகபெருமான்  அவர்களாலேயே  அருளாசி வழங்கப்பெற்ற, அருணகிரிநாதசுவாமிகள் அவர்களால் வழங்கப்பட்ட கந்தரநுபூதியைப் படித்து, பாராயணம் செய்து முக்தி நிலை பெறுவோமாக! மேலும்,
             ‘’கந்தர் அனுபூதி பெற்று, கந்தர் அனுபூதி சொன்ன
               எந்தை அருள் நாடி இருக்கும் நாள் எந்நாளோ’’
என்ற தாயுமானவர் பாடலை, என் ஆதங்கப் பாடலாகப் பாடி நிறைவுசெய்கின்றேன்.”  இங்ஙனம் அவையோர் ஆர்ப்பரிக்க, அனைவரும் பாராட்ட அவர்தம் [பொழிவை நிறைவு செய்தார்.
இத்தகைய பத்திப் பொழிவுகளை அவர் உலகெங்கும் நிகழ்த்தவேண்டும் எனப் பலரும் எதிர்பார்க்கின்றனர்.தம் துணைவரின் அடியொற்றித் தளராது தமிழ்ப்பணியாற்றிவரும் அவரை நாம் அனைவரும் பாராட்டவேண்டும்.

1 comment:

  1. அருமை,அருமை. அருணகிரிநாதரின் அழகு தமிழ்,தெய்வத்தமிழ் அனைவராலும் அர்த்தம் உணர்ந்து பாடப்பெற்று முருகப்பெருமானின் திருவருளுக்கு ஆட்பட கார்த்திகேயன் அருள் பொழிவாராக. தங்களின் விளக்கமும் வாசுகி அம்மையாரின் விரிவுரையும் நெஞ்சில் தெய்வீக உணர்வை ஏற்படுத்தியது.நன்றி.

    ReplyDelete