Monday, May 11, 2015

ஈப்போ கவிதைப் பெருவிழா



ஈப்போ கவிதைப் பெருவிழா

சனவரி 24 அன்று மலேசியா மண்ணில் ஈப்போ நகரில் கவிதைப் பெருவிழா முதன் முதலாகக் கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கியது. சென்னையிலிருந்து 40 தமிழர்களை செந்தமிழ்த் தேனீ அவர்கள் அழைத்துச் சென்றார். 25 அன்று காலை டத்தோ சாமிவேலு அவர்கள் மாநாட்டைத் தொடங்கி வைத்து விழாப் பேருரை ஆற்றி, விழா மலரையும் வெளியிட்டுச் சிறப்புச்சேர்த்தார். மாலை நிறைவு விழாவை டத்தோ சரவணன் அவர்கள் பங்கேற்று நிறைவுப் பேருரை ஆற்றிப் பெருமை சேர்த்தார்.
கருத்தரங்க நிகழ்வுகளில் பல அமர்வுகளில் பலரும் பங்கேற்றுப் பெருமை சேர்த்தனர். அதனில் இறுதியாக கவியரங்கம் ‘’சிலைகள் பேசினால்’’ என்ற தலைப்பில் புலவர் வெற்றி அழகன் அவர்களின் தலைமையில் மிகச் சிறப்பாக நடந்தது. அதனில் முனைவர் வாசுகி கண்ணப்பன் அவர்கள் ஔவையாகவே மேடையில் தோன்றி கவிமலர் படைத்தார். அனைவரும் அடையாளமே தெரியாத நிலையில் பெரிதும் பாராட்டி மகழ்ந்தனர்.  


சிலைகள் பேசினால்
ஔவையார் சிலை பேசினால்
முனைவர் வாசுகி கண்ணப்பன்

முத்தமிழ்ப் பாவலர் மன்றம், உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம்
முனைந்து நடத்தும் உலகத் தமிழ்க் கவிதைப் பெருவிழா இத்திருவிழா
எள்ளுப் பேரப்பிள்ளைகள் முத்தமிழ் அறிஞர்கட்கும், நற்றமிழ் சுவைஞர்கட்கும்
சிலையாய், நிலையாய், தமிழ்த் தாயாய், மகிழ்வாய் நிற்கும்
பூட்டிக்குப் பூட்டி ஔவைப் பாட்டி
செந்தமிழில் முதலில் சொல்வேன் தமிழ் வணக்கம்,

என்னை அறிந்தவர்கட்கு நினைவுபடுத்துகின்றேன்
என்னை அறியாதவர்கட்கு அறிமுகப்படுத்த விழைகின்றேன்
நான் எழுதிய பாடல்கள் 58. அகமோ 26, புறமோ 32.
அகத்தினை, ஐந்திணையில் அகங்குளிர அளித்து மகிழ்ந்தேன்
குறிஞ்சி 4, முல்லை 5, மருதம் 4, நெய்தல் 4, பாலை 9
எனப் பகர்ந்தே பாடியுள்ளேன் பரவசமுடன்

என்னஇது பாடல் கணக்கு? கேட்பது காதில் விழுகிறது
பாட்டிக்கு ஞாபகமா இருக்கிறது
எல்லாம் உங்கள் ஆய்வின் கணக்கீடு  
எத்தனை எத்தனை ஆய்வுரைகள்
அத்தனையும் என் அழியாச் சொத்தின் பட்டியல்

ஒரு காலத்தில் தமிழ் நாட்டில் தமிழ்ப்பள்ளியில் முதல் வகுப்பில் என் பாடல்
தரணி முழுக்க முழங்கியது என் பாடல்
ஆத்திசூடி, மூதுரை, நல்வழி எனப்பட்டியல் நீள்கின்றது. அதுமட்டுமா
மூவேந்தர்கள் மாரிவெண்கோ சேரமான், உக்கிரப் பெருவழுதி பாண்டியன்,
பெருநற்கிள்ளி சோழன் மூவேந்தர்கள் ஒன்றாயிருந்த அவையில் பாடியவள்
போரை நிறுத்திய வெண்புறா, காதலர் தாபத்தை உணரப்பாடிய காவியப்புறா
எனவும் தமிழ்ப் புறாக்களால் போற்றப்பட்டேன்

அதியமான் தந்த அதிசய நெல்லிக்கனியால்
அதிசயமாய் வாழ்ந்தேன் பல தலைமுறையாய்
ஆச்சிரியமாய்ப் பார்ப்பது புரிகிறது 
திருமூலரும் சிரஞ்சீவியாய் வாழ்ந்தவர்தானே?

 சங்க காலத்தில் அதியமானின் அவைக்களப் புலவராய்
10 ஆம் நூற்றாண்டில் அங்கவை, சங்கவைக்குத் திருமணம் செய்வித்தவராய்
12 இல் சோழர் காலத்தில் ஆத்திசூடி,கொன்றைவேந்தன் அளித்தவராய்
14 இல் ஔவைக் குறள், நல்வழி, மூதுரை முகிழ்த்தியவராய்
17,18 இல் ‘பந்தனந்தாதி’ படைத்தவராய்
இது நெல்லிக்கனியின் சக்தியா? அல்லது
என் பெருமை போற்றி, வைக்கப்பட்ட பலரா?
MAM குடும்பத்தில் எத்தனை இராமசாமி
ஏன் எங்கள் குடும்பத்தில் என் மாமனார் பெயரில் எத்தனைக் கங்காதரர்
சொல்வது என் கடமை, ஆராய்ந்து தெளிவுறுவது உங்கள் திறமை

என் பெருமையை நானே சொல்வது எனக்குப் பெருமையா?
பாரதி, தன் கட்டுரையில் சொன்னதுதான் எனக்குப் பெருமையோ பெருமை
‘மற்றைச் செல்வங்கள் எல்லாம் பறிகொடுக்க நேர்ந்தாலும்,
மீண்டும் பெறலாம். ஔவை நூல்களை இழக்க ஒருபோதும் சம்மதியோம்
மீண்டும் சமைக்க முடியாத தனிப் பெருஞ்செல்வம்’
கொள்ளுப் பேரனே பாரதி உனக்குத் தனிப்பெரும் நன்றி
இன்று புகழ்கிறார்கள் ஜப்பானிய ஹைக்கூ கவிதை
புதுக்கவிதையாம், புகழ்க் கவிதையாம், குறுங்கவிதையாம்
அன்றே பாடினேன் இரண்டே சொற்கள்
நன்றே பாடினேன் ஆத்திசூடி, நீதியின் உயர்ப் படிக்கற்கள்
பாட்டி என் பெருமை படிப்படியாய் பெருகும்
பகர்ந்திட நேரம் சுருங்கும், இருக்கும் நேரமோ மிக மிகக் கொஞ்சம்
குறிப்பாய் ஒரு வேதனையை அஞ்சி
தயக்கத்துடன் விதைக்கின்றேன் உங்கள் நெஞ்சில்

ஔ வை ஔவை அழகுத் தமிழ்ப் பெயர்
ஔவை என்றால் முதிர் ஞானி எனப் பகர்வர்
ஔவைப் பாட்டி பலரெழுதுவது அவ்வைப்பாட்டி
ஔவைப் பாட்டியைப் பிரித்தால் ஔவை + பாட்டி
அவ்வைப்பாட்டியை ஒருவன் பிரித்தான்.
நினைக்க அஞ்சுகின்றது அகம், மயங்குகிறது மனம்,
சொல்லத் தயங்குகிறது நாக்கு அவ் + வைப்பாட்டி
அன்றே கூறினார் முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்
இன்று கூறி நினைவூட்டுகிறது என் வாதம்
உயரெழுத்து ஔ பிரிக்கப்படலாமா?
அதனால் வந்தேன் மலேயா,  சிலையான நான் பேசலானேன்
அய்யகோ தாளமுடியவில்லை தமிழைப் படுத்தும்பாடு
இதுதான் என் நெஞ்சக் குமுறலின் வெளிப்பாடு
விழிப்படைவது, விடை காணவேண்டியது உங்கள்பாடு
விடைபெறுகின்றேன் இத்தோடு. நன்றி வணக்கம்.


 

No comments:

Post a Comment